இன்று ஒரு தகவல் - 29


நாம் காண்பதை ரசிப்பதற்கு இயற்கை நமக்கு அளித்திருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும், அது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; மற்றொன்று இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண தவுகின்றன. பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே.


நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான கண் மணிக்குள் நுழையும் ஒளிக்கதிர்களைவிழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணிக்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப் படுத்துகிறது. இச்செயல் அக்காமடேஷன் எனப்படுகிறது.
நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் கணப்பொழுதில் நிகழ்ந்து காட்சியை நமக்கு அடையாலபடுத்துகிறது. எல்லா விலங்குகளின் கண்களும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வல்லமை பெற்றிருந்தாலும் மனிதானின் கண்கள் தான் அவற்றில் மேம்பட்டு விளங்குகின்றன. மனிதனது கண்கள் உணர்ச்சிகளையும் ஆள் மனதின் என்னங்களையும் வெளிக்காட்ட வல்லவை. 

சில மனிதர்கள் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள். அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல் நுட்பம் கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம். கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை கண்ணப் பார்த்து பேசு மாப்ளஎன்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை. அது நேர்பார்வையும் அல்ல.

ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை, அந்தக் கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டுசேர்க்கும் என்பது மிகையல்ல. இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.

காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாய், இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு லயித்திருக்கிறார்கள்.

என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

திருக்குறள்... வள்ளுவர்..மிகுந்த பொறாமை கொள்ளச்செய்யும் ஒரு மனிதர், ஆம். வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

 ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால்,அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/பார்வை..  

 (தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே.. அந்தத் தானைதான் வள்ளுவர் சொல்வது)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னுயிர் பறிக்கும் எமனோ,பார்க்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும் சேர்ந்ததோ அவளின் கண்கள். இன்றைய லட்சத்திச் சொச்சகாதல் கவிதைகளின் மூலம் இந்தக் குரல்தானோ?

 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
 நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது.ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை..மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை. ரசனையின் உச்சம் வள்ளுவா..மீண்டு-ம் வா.தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது. திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இருமடங்கு.

பூஒத்து அலமரும் தகைய; ஏஒத்து
எல்லாரும் அறிய நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட மென்தோள்,
மாமலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே

இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக்கண்,பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பலவகைக் கண்களுடன் ஒப்பிட்டு..தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான். அழகியல் அல்லது அழகியல் மட்டுமே. தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப் பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.

மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்...

மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,செவ்வரிகளைக்கொண்ட குளிச்சியான கண்கள் மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை விரியச் செய்யும் வரிகள் அவை. காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் கயல்விழியாள் என் காதலியேஎன்றி எழுதி வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி..என்று தொடங்கும் பாடலில்

 கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர் கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய சுடர்துயர் எடுப்பும்... என்கிறார்.

கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.

இவ்வளவு தூரம் போட்டர பெற்ற கண்களை வாரத்தில் ஒரு நாளாவது அதனை பாதுகாக்க சில செயல்களை செய்திருப்போமா? என்றால் நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வோம். 

சரி எவ்வாறு அதனை பாது காப்பது...தினமும் 5 தடவை  குளிர்ந்த நீரால் கண்களை நன்கு அடித்து கழுவ வேண்டும். இதனால் கண்ணில் உள்ள தூசுகள் அகன்று விடும். வாரம் ஒரு முறை எலும்பிச்சை பழச்சாறை சுடுதண்ணீரில் கலந்து கண்களை திறந்து ஆவி பிடித்தால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பஞ்சை பன்னீரில் நனைத்து கண்களில் ஐந்து நிமிடம் வைத்தால் கண்கள் குளிர்ச்சி அடையும், இதனை செய்தாலே உங்கள் கண்கள் பிரகாசிக்கும்.


மாட்டை குளிப்பாட்டி தொட்டியில் நிறுத்தினால் இறைச்சியாக வரும்

ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது திறந்த வெளியில் போட்டு கழுத்தை அறுப்பதும் அப்போது அவை துடித்து உயிர் விடுவதும் கொடூரமாக இருக்கும்.

பெரம்பூர் இறைச்சி கூடத்தில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகிறது. அதில் வெளிவரும் கழிவுகள் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றத்தை பரப்பி வந்தது. இதை தடுக்கவும், சுகாதாரமான முறையில் பொதுமக்கள் இறைச்சிகளை பயன்படுத்தவும் நவீன இறைச்சிகூடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

ரூ.48 கோடி செலவில் தனியார் நிறுவனம் ஒன்று நவீன இறைச்சிகூடத்தை அமைத்துள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்டு எந்திரமயமாக்கப்பட்ட இந்த இறைச்சி கூடத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த இறைச்சி கூடத்தில் ஆடு, மாடுகள் வெட்டுவது வெளியில் யாருக்கும் தெரியாது.

மந்தையில் இருந்து மாட்டை குளிப்பாட்டி டாக்டர் பரிசோதித்த பிறகு தனிவாசல் வழியாக ஊஞ்சல் வடிவ தொட்டிக்கு அழைத்து செல்லப்படும். அங்கிருந்து வெளியே தலையை நீட்டியபடி மாடு நின்று கொண்டிருக்கும். உடனே குப்பை தொட்டியைபோல் தானியங்கி மூலம் தொட்டி சாயும். அடுத்த கணமே மேலிருந்து இயக்கப்படும் எந்திர கத்தி தலையை தனியாக துண்டித்து விடும்.

பின்னர் உடலை எடுத்து காலில் சங்கிலியால் கட்டி கன்வேயர் கொக்கியில் தொங்க விடுவார்கள். ரத்தம் வடிவதற்காக அந்த பெல்டில் சிறிது தூரம் சுற்றி வரும். ரத்தம் நின்றதும் நவீன எந்திர கத்திகள் மூலம் கால்கள் துண்டிக்கப்படும். அதன்பிறகு தோல் உரிக்கப்படும். பின்னர் ராட்சத கத்தி மூலம் உடல் இருகூறாக வெட்டி எடுக்கப்படும்.

டாக்டர் பரிசோதனைக்கு பிறகு இறைச்சி வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இங்கு ஏற்றுமதிக்காக பதப்படுத்தும் பகுதிகளும் உள்ளது. 20 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சிகளை இங்கு பாதுகாப்பாக பதப்படுத்த முடியும்.

இந்த இறைச்சிகூடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது:-

இந்த நவீன இறைச்சிகூடம் தனியார் மூலம் ரூ.48 கோடி செலவில் கட்டி பராமரிக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் 60 மாடுகள் மற்றும் 240 ஆடுகள் வெட்ட முடியும். இந்த இறைச்சி கூடத்தை 22 ஆண்டுகள் தனியார் நிறுவனம் பராமரிக்கும்.

அதுவரை வருடத்துக்கு ரூ.40 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்துவார்கள். அதன் பிறகு மாநகராட்சியிடம் ஒப்படைத்து விடுவார்கள். இந்த நவீன இறைச்சி கூடத்தில் கழிவுகளை சேகரிக்க தனிவசதி உள்ளது.

இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பணிகள் அனைத்தும் முடிந்து இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, கவுன்சிலர் ஆர்.டி.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

யார் காரணம்?

ஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.

பேச்சு

உலகத்தைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!பேசி உலகத்தை நீ ஒன்றும் செய்ய முடியாது.
உன்னைப் பற்றி பேசுகிறாயா?
நிறுத்து!உன்னைப்பற்றி நீ பேசினால் யாரும் கேட்டுக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
உன் அனுபவத்தைப் பற்றி பேசுகிறாயா?
வேண்டாம்!ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக வைத்து
இருப்பார்கள்.உன் பேச்சு செலாவணியாகாது.
பிறருக்கு நன்மை செய்வதைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!செய்!

பிரிவு

பாரதப் போர் முடிந்தது.தர்மர் முடி சூட்டிக் கொண்டார்.கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது.வேதனையுடன் தர்மர் சொல்கிறார்,
''கண்ணா,எங்கள் தெய்வமே,
உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம்.
உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை ஆகும்.
உன்னைப்போ என்று சொன்னால் செய் நன்றி மறந்தவனாவேன்.
உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும்.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான்.உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும்.உன்னை மறவாதிருக்க வேண்டும்.''

அப்பாடா

ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் 'ஐயோ' என்றால் குதிரை நிற்கும்.'அப்பாடா' என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,'ஐயோ'என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக 'அப்பாடா' என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

வாய் சாமர்த்தியம்

ஒரு ராஜாவுக்கு தாராள மனசு.ஒரு நாள் மீனவன் ஒருவன் அழகான வண்ண மீனை ராஜாவிடம் கொடுத்தான்.உடனே ராஜா நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணிக்கு எரிச்சல்.ஒரு சாதாரண மீனுக்கு நூறு பொற்காசா என்று.ராஜாவை நச்சரித்து நூறு பொற்காசுகளை திரும்ப வாங்கச்சொல்லி ஒரு யோசனையும் சொன்னாள்.''இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்.பதில் சொல்லாவிடில் காசைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.''என்றாள்.அரசனும் மீனவனைக் கூப்பிட்டு அக்கேள்வி கேட்க ,அவன்,''இது ஆணுமல்ல ,பெண்ணுமல்ல,அலி.''என்றான்.இப்பதிலைக்கேட்டு பரவசமடைந்து அரசன் இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தான்.
ராணிக்கு மகாஎரிச்சல்.எப்படி இருநூறு பொற்காசுகளைத் திரும்ப வாங்குவது என யோசித்தாள்.
மீனவன் பொற்காசுகளைத் தூக்கிச் செல்லும் போது ஒரு காசு தவறி கீழே விழுந்தது.ராணி சொன்னாள்,''பாருங்கள்!இவன் பேராசைக்காரன்.இருநூறு காசில் ஒன்று விழுந்ததற்கே பெருந்தன்மை இல்லாது ஓடி எடுக்கிறானே, காசைத் திரும்ப வாங்குங்கள்.''
ராஜா கேட்டார்,''ஏன் இப்படி அற்பத்தனமாய் ந்கடந்து கொண்டாய்?''
மீனவனோ ,''ஒவ்வொரு காசிலும் உங்கள் முகமும் ,ராணியின் முகமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.அது கீழே விழுந்து யார் காலிலாவது பட்டால் உங்களுக்கு அவமானம்.அதனால் தான் எடுத்தேன்.''என்றான்.மகிழ்ச்சியுற்ற ராஜா அவனுக்கு இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணி இப்போது வாயைத் திறக்க வில்லை.

நிழல்

நான் மாறும் போது தானும் மாறியும்
நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்.

கழுதை

குனிந்த தலை குனிந்தபடி மூட்டை சுமந்து செல்லும் கழுதையைப் பார்த்து ஒரு காகம் வருத்தப்பட்டது.''பாவம்,இந்தக் கழுதை எப்போது பார்த்தாலும் யாருக்காகவோ மூட்டை சுமந்து கஷ்டப்படுகின்றது.''
''நாம் என்ன செய்ய முடியும் ?கழுதை தான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.,''என்றது இன்னொரு காகம்.
''ஏன் அப்படிச் சொல்கிறாய்?''என்று கேட்டது முதல் காகம்.
''குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருப்பான்.''என்றது அடுத்த காகம்.
இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன்.

ராக்கெட் எப்படி இயங்குகிறது?

PSLV ராக்கெட் ஒரு செயற்கைக்கோளையோ அல்லது சந்திரயானையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக்கொண்டு செல்கிறது? ஒரு சுற்றுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கைக்கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?

இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். நாம் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஒன்று பலூனை எடுத்து அதில் காற்றை நிரப்பி, வாயைக் கட்டாமல் சட்டென்று விட்டுவிடுவது. பலூனின் வாய் வழியாக காற்று வெளியேறும்போது பலூன் முன்னோக்கி (சற்றே கன்னா பின்னாவென்று சுருண்டபடி) பாயும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு.

படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. அதேபோல படகில் மண்ணெண்ணெய் அல்லது டீசலால் இயங்கும் சிறு புரொபெல்லரை (உந்துகருவி) பொருத்துகிறீர்கள். புரொபெல்லர் சுழன்று தண்ணீரைப் பின்னோக்கித் தள்ளுகிறது. இதனால் விசைப்படகு முன்னோக்கி முன்னேறுகிறது.

இதேபோலத்தான் ஜெட் விமானத்திலும் நடக்கிறது. ஜெட் எஞ்சினில் நிறைய எரிபொருள் இருக்கும். எஞ்சினின் முன்புறத்தில் ஒரு சுழலி இருக்கும். சுழலி சுற்றும்போது வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும். அந்தக் காற்று அழுத்தப்படும். அதில் எரிபொருள் கலக்கப்படும். பற்றவைக்கப்படும். எரிபொருள் எரிந்து, எக்கச்சக்கமாக கரியமில வாயுவை உருவாக்கும். இந்தக் கரியமில வாயு வெளியேறுவதற்கு பல நுண்துளைகள் ஜெட் எஞ்சினின் பின்பக்கம் இருக்கும். இந்த நுண்துளைகள் வழியே வெகு வேகமாக வெளியேறும் வாயுக்கள், ஜெட் எஞ்சினைக் கடுமையான வேகத்தில் முன் நோக்கிச் செலுத்தும். இதனால் ஜெட் எஞ்சினும் அதோடு இணைந்த விமானமும் முன்னோக்கிப் பாயும். இந்தப் பாய்ச்சலை வான் நோக்கிய பாய்ச்சலாக மாற்றுவது (உயரத்தில் செலுத்துவது) எப்படி என்பதை பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கும்போது குறிப்பிட்டுள்ளேன்.

சரி, ராக்கெட் வடிவமைப்பில் என்ன வித்தியாசம்? ஜெட் விமானங்கள் பற்றகு உயரம் காற்று மண்டலத்துக்குள்ளாகவேதான் உள்ளது. சுற்றிலும் உள்ள காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் இருந்தால்தான் எரிபொருள் எரியும். ஆனால், ராக்கெட்டோ, காற்று மண்டலத்தை விட்டு அப்பால் செல்கிறது. அந்த உயரத்தில் சுற்றிலும் ஆக்சிஜன் என்பது மருந்துக்கும் கிடையாது. அப்படியென்றால் எரிபொருள் எரிய என்ன செய்வது?

கூடவே எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனையும் எடுத்துச் செல்லவேண்டும். இது மேற்கொண்டு சுமையை அதிகரிக்கும்! ஆனால் வேறு வழியில்லை. கீழே அமெரிக்க ராக்கெட் ஒன்றின் படம் உள்ளது.

பி.எஸ்.எல்.வி மட்டுமல்ல, சந்திரயானில் உள்ள எஞ்சினும் இப்படித்தான். அதில் எரிபொருளும் உண்டு. கூடவே ஆக்சிஜனும் உண்டு.

இந்த எரிபொருள் எப்படி இருக்கும்? இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.

சந்திரயானில் இருப்பது கிரையோஜீனிக் எஞ்சின் கிடையாது. திரவ எரிபொருள் ஒன்றையும் ஆக்சிஜன் வழங்கி திரவம் ஒன்றையும் எடுத்துச் செல்கிறது.

***

சரி. சந்திரயான் எப்படி போகும் வழியில் வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்?

ஒரு குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லும் எந்தப் பொருளுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட வேகம் இருக்கும். இதைக் கொடுக்கக்கூடிய சமன்பாடு இந்தப் பதிவில் உள்ளது. ஒரே அண்மை நிலை உள்ள, ஆனால் இருவேறு தொலைவு நிலைகள் உள்ள இரண்டு பாதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கே சிறிய பாதையிலிருந்து பெரிய பாதைக்குச் செல்ல, அண்மை நிலை வரும்போது, அதன் வேகத்தை அதிகரிக்கவேண்டும். அப்படிச் செய்தால் அது சுற்றும் பாதையின் தொலைவு நிலை அதிகமாகும். இதை, கீழ்க்கண்ட சமன்பாட்டை வைத்தே பார்க்கலாம்.
இங்கே G என்பது மாறாத ஓர் எண். m என்பது நடுவில் இருக்கும் கனமான பொருளின் எடை. பூமியைச் சுற்றிவரும்போது பூமியின் எடை. சந்திரனைச் சுற்றி வந்தால் சந்திரனின் எடை. a என்பது நீள்வட்டப்பாதையின் semi major axis. அதாவது அண்மை நிலை, தொலைவு நிலை ஆகியவற்றுடன் பூமியோ சந்திரனோ எதைச் சுற்றுகிறதோ அதன் விட்டத்தையும் கூட்டி, அதை இரண்டால் வகுத்தால் வரும் தொகை. சிறிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது அண்மை நிலையில் இருக்கும் வேகம், பெரிய நீள்வட்டத்தைச் சுற்றும்போது இருப்பதைவிடக் குறைவாக இருக்கும். இந்த வேகங்களைத் துல்லியமாகக் கணக்கிடலாம். இதிலிருந்து வேக மாறுதலையும் துல்லியமாகக் கணக்கிடலாம்.

உதாரணத்துக்கு சந்திரனை, சந்திரயான் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் நிறை 7.36 x 1022 kg. ஈர்ப்பு மாறிலி G என்பது 6.67 x 10-11 m3 kg-1 s-2. சந்திரயான் 200 - 7,502 கி.மீ பாதையில் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரனின் விட்டம் 3475 கி.மீ. அப்படியானால் இந்தப் பாதையில் a = (200+7502+3475)/2 = 5588.5 கி.மீ. இந்தப் பாதையில் சுற்றும்போது, அண்மை நிலையில் (200 கி.மீ) இருந்தால் அப்போது r = 3475/2 + 200 = 1937.5 கி.மீ.

இவை அனைத்தையும் மேலே உள்ள சமன்பாட்டில் போட்டால் கிடைப்பது: அண்மை நிலை வேகம் = விநாடிக்கு 2.05 கி.மீ.

இப்பொது தொலைவு நிலையை சுமார் 250 கி.மீ என்று குறைக்கவேண்டும். அப்படியானால், 200-250 கி.மீ பாதைக்கான a என்ன? = (200+250+3475)/2 = 1962.5 கி.மீ. r என்பது முன்போலவே 1937.5 கி.மீ. இதை சமன்பாட்டில் நிரவினால் கிடைப்பது, வேகம் = விநாடிக்கு 1.6 கி.மீ.

அதாவது அண்மை நிலை (200 கி.மீ) வரும்போது, அதற்கு இருக்கும் வேகம் விநாடிக்கு 2.05 கி.மீ. இதனை விநாடிக்கு 1.6 கி.மீ என்று குறைக்கவேண்டும். பிரேக் எதுவும் கிடையாது, பிடிப்பதற்கு. எனவே எரிபொருள் எஞ்சினை இயக்கி, போகும் வழி எதுவோ அந்தத் திசையில் எரிந்த வாயுக்களை வெளியேற்றுவார்கள்.

எவ்வளவு நேரம் இந்த மோட்டாரை இயக்குவது? எவ்வளவு எரிபொருளை எரிப்பது? இது சற்றே கடினமான கணக்கு. இதற்கு சந்திரயானின் நிறை என்ன என்று தெரியவேண்டும். அந்த மோட்டாரின் உந்துசக்தி என்ன என்று தெரியவேண்டும். அதைக்கொண்டு, எவ்வளவு நேரம் எரிபொருளை எரிக்கவேண்டும் என்று கணக்கிடவேண்டும். அதை நாம் இங்கே பார்க்கவேண்டாம்.
மற்றொன்று: இவ்வாறு மோட்டாரை இயக்கி வேகத்தைக் குறைப்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடாது. உதாரணமாக, தொலைவு நிலையை 7502 கி.மீலிருந்து 250 கி.மீக்கு மாற்ற மோட்டாரை 866 விநாடிகள் இயக்கவேண்டியிருந்தது. இதற்குள் சந்திரயான் தனது சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 1400 கி.மீ தூரம் நகர்ந்திருக்கும் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! இதனால் என்ன ஆகும் என்றால் அதன் பாதையில் அண்மை நிலையிலும் சற்றே மாற்றம் நிகழ்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பாதையில் அண்மை நிலை 200 கி.மீ என்பதிலிருந்து 187 கி.மீ என்று ஆகிவிட்டது.

எங்கோ கேட்டவை (கவி அரங்கம்)



காதல் என்பது 

ஒரு அழகான காடு ! 

அங்கே புலிகள் 

மான்களால் 

தோற்கடிக்கபடுகின்றன 

ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன.

இவை ஆசியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.


அரேபிய மக்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த

அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்

படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது

(திமில் என்பது 45Kg எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக உணவோ நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும் உணவாகவும் மாற்றி கொள்கிறது

உணவோ நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும், நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (PUMP)

குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றி கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது

குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்க்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்

குட்டி போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும் அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும் பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் நிகழ்ந்துவிடும் (EXPLOSIVE HEAT DEATH)

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டுமே குறையுமே தவிர அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமலிருக்கும்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவேளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) நீர் போதை ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும் (WATER INTOXICATION) ஆனால் ஒட்டகம் வறட்ச்சிகு பிறகு 100 லிட்டர் குடிக்கும் ஆனால் சாகாது

அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும் அப்பொழுது தான் அதற்கு வியர்வையே வரும் (மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் காய்ச்சல் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும்

ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம்

ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது நம்முடைய சிறுநீரில் அதிக தாது (உப்புகள்) கழிவுகள் 8 சதவீதமும் 92 சதவீதம் நீரும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40%க்கும் அதிகமாக கழிவும் குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம் அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதனுடைய சிறுநீரகம்(MICROBIAL SYNTHESIS)

மற்ற பிராணிகளின் மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்து விடலாம் என்று மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ கூருகிறார் அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம் ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும் ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்பு தான் காரணம்

அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது

மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகின்றது பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு

கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக்கொள்கிறது

நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும் நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும் ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்க்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது

அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான் அதன் உடல் அமைப்பு ஆகும்

அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்

இப்படியாக சுவாசம் சிறுநீர் வியர்வை எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம்

மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும் ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் SNOW SHOES ஆகும்)

அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 Kgs வரை எடையுள்ள ஒட்டகம் 450 Kgs வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலின் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது

குட்டி போட்டு பால் கொடுக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (ANKLE JOINT) மட்டும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும் அதனால் தான் ஒட்டகம் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது

மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதி ஒட்டகத்திற்கு உள்ளது

அதன் காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது

அதன் இமையிலுள்ள நீண்ட முடிகள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கி விடாமல் தடுத்து விடுகிறது (SUN CLASS)

கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது மேலும் பாலை சூரியன் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது

ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரபிகள்

எங்கேயாவது தூரத்தில் உணவோ நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12அடி உயரத்தில் தலை இருக்கும்)

ஒட்டகங்கள் அதிகமான அளவு பாலை தருகிறது ஒட்டகப்பாலில் அபரிதமான அளவு வைட்டமின் C உள்ளது

மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்

பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும் அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்

எந்த அளவிற்கு எனறால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும் மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்

இவ்வாரு தனது உடல் அமைப்பு அதன் செயல்பாடு அனைத்தும் அற்புதமானதாக கொண்ட இந்த ஒட்டகம் தானாகவே பரிணாம வளர்ச்சியின் மூலம் இதை பெற்றுக் கொண்டதா அல்லது இறைவனின் வல்லமையா என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்

திரு-குர்-ஆன் 88வது அத்தியாயம் 17வது வசனம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா ? என்று நம்மை பார்த்து கேட்கிறது இந்த கேள்வியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை பல பல சிந்திப்போம்…..செயல்படுவோம்……வெற்றிபெருவோம்….. இன்ஷாஅல்லாஹ்...

இந்த கட்டூரையின் ஒட்டகம் பற்றிய அறிவியல் உண்மைகளை தொகுத்துக் கொடுத்த சகோ.அதிரை ஃபாருக் அவர்களுக்கு எமது இனையதளத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!!