ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது திறந்த வெளியில் போட்டு கழுத்தை அறுப்பதும் அப்போது அவை துடித்து உயிர் விடுவதும் கொடூரமாக இருக்கும்.
பெரம்பூர் இறைச்சி கூடத்தில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகிறது. அதில் வெளிவரும் கழிவுகள் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றத்தை பரப்பி வந்தது. இதை தடுக்கவும், சுகாதாரமான முறையில் பொதுமக்கள் இறைச்சிகளை பயன்படுத்தவும் நவீன இறைச்சிகூடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
ரூ.48 கோடி செலவில் தனியார் நிறுவனம் ஒன்று நவீன இறைச்சிகூடத்தை அமைத்துள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்டு எந்திரமயமாக்கப்பட்ட இந்த இறைச்சி கூடத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த இறைச்சி கூடத்தில் ஆடு, மாடுகள் வெட்டுவது வெளியில் யாருக்கும் தெரியாது.
மந்தையில் இருந்து மாட்டை குளிப்பாட்டி டாக்டர் பரிசோதித்த பிறகு தனிவாசல் வழியாக ஊஞ்சல் வடிவ தொட்டிக்கு அழைத்து செல்லப்படும். அங்கிருந்து வெளியே தலையை நீட்டியபடி மாடு நின்று கொண்டிருக்கும். உடனே குப்பை தொட்டியைபோல் தானியங்கி மூலம் தொட்டி சாயும். அடுத்த கணமே மேலிருந்து இயக்கப்படும் எந்திர கத்தி தலையை தனியாக துண்டித்து விடும்.
பின்னர் உடலை எடுத்து காலில் சங்கிலியால் கட்டி கன்வேயர் கொக்கியில் தொங்க விடுவார்கள். ரத்தம் வடிவதற்காக அந்த பெல்டில் சிறிது தூரம் சுற்றி வரும். ரத்தம் நின்றதும் நவீன எந்திர கத்திகள் மூலம் கால்கள் துண்டிக்கப்படும். அதன்பிறகு தோல் உரிக்கப்படும். பின்னர் ராட்சத கத்தி மூலம் உடல் இருகூறாக வெட்டி எடுக்கப்படும்.
டாக்டர் பரிசோதனைக்கு பிறகு இறைச்சி வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இங்கு ஏற்றுமதிக்காக பதப்படுத்தும் பகுதிகளும் உள்ளது. 20 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சிகளை இங்கு பாதுகாப்பாக பதப்படுத்த முடியும்.
இந்த இறைச்சிகூடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:-
இந்த நவீன இறைச்சிகூடம் தனியார் மூலம் ரூ.48 கோடி செலவில் கட்டி பராமரிக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் 60 மாடுகள் மற்றும் 240 ஆடுகள் வெட்ட முடியும். இந்த இறைச்சி கூடத்தை 22 ஆண்டுகள் தனியார் நிறுவனம் பராமரிக்கும்.
அதுவரை வருடத்துக்கு ரூ.40 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்துவார்கள். அதன் பிறகு மாநகராட்சியிடம் ஒப்படைத்து விடுவார்கள். இந்த நவீன இறைச்சி கூடத்தில் கழிவுகளை சேகரிக்க தனிவசதி உள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பணிகள் அனைத்தும் முடிந்து இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, கவுன்சிலர் ஆர்.டி.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.