நாம் காண்பதை ரசிப்பதற்கு இயற்கை நமக்கு அளித்திருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும், அது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; மற்றொன்று இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண தவுகின்றன. பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே.
நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப் படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.
நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் கணப்பொழுதில் நிகழ்ந்து காட்சியை நமக்கு அடையாலபடுத்துகிறது. எல்லா விலங்குகளின் கண்களும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வல்லமை பெற்றிருந்தாலும் மனிதானின் கண்கள் தான் அவற்றில் மேம்பட்டு விளங்குகின்றன. மனிதனது கண்கள் உணர்ச்சிகளையும் ஆள் மனதின் என்னங்களையும் வெளிக்காட்ட வல்லவை.
சில மனிதர்கள் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள். அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல் நுட்பம் ‘கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம். கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது.
ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை “கண்ணப் பார்த்து பேசு மாப்ள” என்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை. அது நேர்பார்வையும் அல்ல.
ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை, அந்தக் கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டுசேர்க்கும் என்பது மிகையல்ல. இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.
காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாய், இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு லயித்திருக்கிறார்கள்.
என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.
திருக்குறள்... வள்ளுவர்..மிகுந்த பொறாமை கொள்ளச்செய்யும் ஒரு மனிதர், ஆம். வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால்,அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/பார்வை..
(தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே.. அந்தத் ‘தானை’தான் வள்ளுவர் சொல்வது)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
என்னுயிர் பறிக்கும் எமனோ,பார்க்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும் சேர்ந்ததோ அவளின் கண்கள். இன்றைய ‘லட்சத்திச் சொச்ச’ காதல் கவிதைகளின் மூலம் இந்தக் ‘குரல்’தானோ?
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது.ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை..மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை. ரசனையின் உச்சம் வள்ளுவா..மீண்டு-ம் வா.தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது. திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இருமடங்கு.
‘பூஒத்து அலமரும் தகைய; ஏஒத்து
எல்லாரும் அறிய நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட மென்தோள்,
மாமலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே’
இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக்கண்,பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பலவகைக் கண்களுடன் ஒப்பிட்டு..தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான். அழகியல் அல்லது அழகியல் மட்டுமே. தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப் பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.
மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்...
மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,செவ்வரிகளைக்கொண்ட குளிச்சியான கண்கள் மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை விரியச் செய்யும் வரிகள் அவை. காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் ‘கயல்விழியாள் என் காதலியே’ என்றி எழுதி வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி..என்று தொடங்கும் பாடலில்
கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர் கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய சுடர்துயர் எடுப்பும்... என்கிறார்.
கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.
இவ்வளவு தூரம் போட்டர பெற்ற கண்களை வாரத்தில் ஒரு நாளாவது அதனை பாதுகாக்க சில செயல்களை செய்திருப்போமா? என்றால் நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வோம்.
சரி எவ்வாறு அதனை பாது காப்பது...தினமும் 5 தடவை குளிர்ந்த நீரால் கண்களை நன்கு அடித்து கழுவ வேண்டும். இதனால் கண்ணில் உள்ள தூசுகள் அகன்று விடும். வாரம் ஒரு முறை எலும்பிச்சை பழச்சாறை சுடுதண்ணீரில் கலந்து கண்களை திறந்து ஆவி பிடித்தால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பஞ்சை பன்னீரில் நனைத்து கண்களில் ஐந்து நிமிடம் வைத்தால் கண்கள் குளிர்ச்சி அடையும், இதனை செய்தாலே உங்கள் கண்கள் பிரகாசிக்கும்.
|