Showing posts with label இலக்கிய சுவை. Show all posts
Showing posts with label இலக்கிய சுவை. Show all posts

மரம்

ஒரு பழைய பாடல்;
மரமது   மரத்தில்   ஏறி   மரமதை   தோளில்   சுமந்து
மரமது   மரத்தைக்   கண்டு  மரத்தினால்    மரத்தைக்   குத்தி
மரமது  வழியே  சென்று   வலைமனை   வரும்போது
மரமது   கண்ட   மாதர்  மரமோடு    மரம்  எடுத்தார்.

இதன் பொருள்;

மரமது மரத்தில் ஏறி =அரசன் (அரச மரம்) மரத்தினால் செய்த தேரில் ஏறி
மரமதைத் தோளில் சுமந்து =மூங்கில் மரத்தை வளைத்து செய்யப்பட வில்  அம்புகளை சுமந்து வேட்டைக்குப் போகிறான்.
மரமது மரத்தைக் கண்டு=அரசன் ஒரு வேங்கையை(வேங்கை மரம்)
பார்த்தான்.
மரத்தினால் மரத்தைக் குத்தி=மரப்பிடி கொண்ட ஈட்டியால் அவ்வேங்கையைக் குத்திக் கொன்றான்.
மரமது வழியே சென்று=காட்டு வழியே தொடர்ந்து சென்றான்.
வலைமனை வரும்போது=அரண்மனை திரும்பும் போது
 மரமது கண்ட மாதர்=அரசனை,அரசனின் தேரைப் பார்த்த மக்கள்
மரமோடு மரம் எடுத்தார்=ஆலத்தி(ஆல்,அத்தி)எடுத்தனர்.

போய் விடும்

ஒரு அழகான தனிப் பாடல்;
தாயோடு   அறுசுவை   போகும்.
தந்தையோடு   கல்வி   போகும்
குழந்தைகளோடு  பெற்ற செல்வப் பெருமை  போகும்.
செல்வாக்கு   உற்றாரோடு   போகும்.
உடன் பிறந்தாரோடு   தோல்   வலிமை   போகும்.
பொன் தாலி அணிந்த மனைவியோடு எல்லாமே போய் விடும்.

நாடோடிப்பாடல்

நாடோடிப்பாடல்கள் மனித உணர்வுகளை அழகாக,தெளிவாகக் காட்டுகின்றன.காதல்,வீரம்,நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியவை.இலக்கண வரம்பை மீறியவை.கற்பனை வளம் கொண்டவை.இதோ,ஒரு பாடல்;

முள்ளு முனையிலே மூணு குளம்   வெட்டி வச்சேன்.

ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத  குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப்  பல்லே இல்லை..

மூவருக்கு இரு கால்

ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.வழியிலே ஒருவனைக் கண்டு,
'
'ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?''என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
''அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து
ஆறு மாசம் ஆச்சு'' என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.'ஆற்றுக்குப் பகை' என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத்  தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,'வேலிக்குப் படல் கட்டுகிறவனே'என்று குறிப்பிட்டான்.தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,'மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ'என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில்  தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன்  (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு''என்று குறிப்பிடுகிறான்

எப்போது வரலாம்?

ஒருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலித்தான்.அவளிடம் தன விருப்பத்தைக் கூற நினைத்தான்.அவள் தினசரி கடை வீதி வழியே செல்வதுண்டு.அனால் கூடவே அவளுடைய தந்தையும் வருவார்.அவர் வராத  ஒரு நாள் பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.பல நாள் காத்திருந்ததன் பலனாக ஒரு நாள் அவள் தனியே வந்தாள்.நேரடியாக விசயத்தைச் சொன்னால் அதில் என்ன ஆவல் நிறைவேறும்?எனவே அவளைப் பார்த்து சொல்கிறான்:
ஒரு மரம் ஏறி,ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து,ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே,உன்
வீடு எங்கே?
அதன் பொருள்:ஒரு மரமாகிய பாதக் குறட்டுக் கட்டையின் மேலே ஏறி
(அந்தக் காலத்தில் செருப்பு மரத்தாலானதாக இருக்கும்.) ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு,ஒரு மரமாகிய கைத்தடியைப் பிடித்துக் கொண்டு,ஒரு மரமாகிய பனை ஓலை விசிறியை  வீசிக் கொண்டு செல்பவரின் பெண்ணே,உன் வீடு எங்கே இருக்கிறது?
அவன்பேசிய பேச்சின்  உட்கருத்தை அவள் புரிந்து கொண்டாளா? புரிந்து கொண்டதனால் உடனே பதில்  இதோ சொல்லி விட்டாளே!
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
அவன் ஒரு நிமிடம் யோசித்தான்.அவனும் புரிந்து கொண்டான்.அதாவது அவள் வீடு பால் விற்கும் இடையன் வீட்டிற்கும்,பானை செய்யும் குயவன் வீட்டிற்கும் நடுவிலேயும்,ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்,நூலைக்  கொண்டு நெசவு செய்யும் நெசவாளியின் வீட்டிற்கும் அருகில் இருக்கிறது.

அடுத்து அவன்,அவள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்று கேட்கிறான்.
அவள் சொல்கிறாள்:
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம்
கட்டிக் கொண்டு மரத்தோடு மரம்
சேர்ந்த பிறகு வந்து சேர்
 அதாவது கதிரவன் மறைந்து,சந்திரன் உதயமான பிறகு,வீட்டில் உள்ளவர்கள்  கதவைச் சாத்தும் போது,கதவு நிலையும் கதவும் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் அதாவது நள்ளிரவில் வருவாயாக என்று தெரிவிக்கிறாள் காதலி.
இனிப்பேச்சு எதற்கு?

தொண்டை நாட்டினர்.

தமிழறிஞர்உ.வே.சு.அவர்கள் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.அவருக்கு முன் மூன்றுஅறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் .விழா அமைப்பாளர் மூவரின் பேச்சுத் திறம் பற்றி உ.வே.சு.ஐயர் அவர்களிடம் கருத்து கேட்டார்.அவரும்,''தொண்டை  நாட்டினர்,தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,''எனக் கூற அவருக்கு ஒன்றும் விளங்காமல், விளக்கமாகக் கூற வேண்டினார்.ஐயர் சொன்னார்,''முதலில் பேசியவரின் பேச்சில் சாரம்ஏதும் இல்லை வெறும் வரட்டுக் கூச்சல் தான் இருந்தது.அவர் தன தொண்டையை மட்டும் நிலை நாட்டினார்.இரண்டாமவர் பேச வேண்டிய தன கடமையை ஒழுங்காகச் செய்தார்.எனவே அவர் தம் தொண்டை செய்து முடித்தார்.மூன்றாமவர் தொண்டை நாட்டை சேர்ந்தவர்.அவர் தன தொண்டை நாட்டின் பெயரை நிலை நாட்டினார்.எனவே மூவருமே தொண்டை நாட்டினர் தானே?''அமைப்பாளர், ஐயர் அவர்களின் மொழி ஆற்றலை எண்ணி வியந்தார்.

வாடா

சாகும் தருவாயிலிருந்த புலவரைக் காண அரசர் மருதப்பன் வந்தார்.புலவர்,''வாடா மருதப்பா...''என்றார்.உடனே அரசருடன் வந்தவர்கள்  கோபம் கொண்டனர்.''....நான் மட்டும் வாடி விட்டேன் பார்த்தீர்களா,அரசே!''என்று சொற்றொடரை முடித்தார் புலவர்.

எங்கே தேடுவது?

மரண பயமில்லை.
அதனால் எனக்கு மதத்தின் மீது பயம் இல்லை.
தேவைகள் இல்லை.
அதனால் இறைவனிடம் வேண்டுதல் இல்லை.
முக்தி தேவையில்லை.
அதனால் இறைவனை நான் தேடவில்லை.
நான் தேடுமிடமேல்லாம் காற்றாக இருக்கிறது.
பார்க்குமிடமெல்லாம் ஒளியாக இருக்கிறது.
பார்ப்பது இறைவனை.
சுவாசிப்பது இறைவனை.
சஞ்சரிப்பது அவனுடன்.
பின்னர்
அவனை நான் எங்கே தேடுவது?

சிங்கங்கள்

நாங்கள் சிங்கங்கள்  தாம்
ஆனால்,
கொடியில் பொறிக்கப்பட்ட
சிங்கங்கள்.
கணத்துக்குக் கணம்
பாய்ந்து கொண்டே இருப்போம்.
எல்லாம்
காற்றின் தயவில் தான்.
       பெர்சியக் கவிஞர் ஜலாலுதீன்  லூமி.

எங்கும் பெண்கள்

இப்போது
பூக்களுக்கு
இறக்கை முளைத்து விட்டது.
அதற்காக வண்டுகள் ஏன் வருத்தப்படுகின்றன.?
**********
பெற்றோரே!
பிள்ளைகளுக்கு

ஏணியாய் அல்ல....

இறக்கைகளாக இருங்கள்.
**********
வான் கோழிகளே  இங்கு
மயிலுக்கு சமமாய்
 மதிக்கப் படவில்லையே!
பின் ஏன்
பிராய்லர் கோழிகள்
பிரசிடென்ட் அவார்டு கேட்டுப் பிராண்டுகின்றன?
**********
மனைவியிடம்
மன்றாடுகிறான்
இப்படி....
அடுக்குமாடி தந்தும்,
கொடுக்கு மாதிரி கொட்டுகிறாயே!
அடுக்குமாடி இது உனக்கு?
**********
கட்டுக் கதை விட்டான்
காதலன்!
காதலிக்குத் தாஜ்மகால்
கட்டுவதாக.
''தாஜ்மகால்''பிறகு கட்டலாம்.
தாலியை உடனே கட்டு''
**********
நாலு பேர் சேர்ந்து
நடுத்தெருவில் சுமக்கும் நாள்
எல்லோருக்கும் வரும்.--அது
ஒரு முறைதான்!ஒரு முறைதான்!
குடித்தழியும்நான் கொண்ட
குடும்பமே நடுத்தெருவில்
எனைச்சுமந்து அழுவதுவோ
தினமும் தான்!தினமும்தான்!
**********

ஓய்வு பெற்ற அதிகாரி

கோப்புகளுடன் குடித்தனம் முடித்தார்.
கோடிக் காகிதங்களில் கோடுகள் கிழித்தார்.
இன்று....
வீட்டு விலாசம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
உறவின் முகங்களை உற்றுப் பார்க்கிறார்.
பதவிப் போதையின் பைத்தியம் தெளிந்தது.
எத்தனை முறை மணி அடித்தாலும்
எதிரொலியும் எழுந்து வராது.
வழிய வந்த அமைதி வலிக்கிறது.
இன்று....
விரும்பி உடனிருப்பவை, வியாதிகள் மட்டுமே.
**********
தந்தை
என்னைத் தூக்கி சுமக்கையில் மகிழ்ந்தவனே,
உன்னைத் தூக்கிடும்போது அழுதிருந்தேன்.
**********
தாய்
சுமந்து வளர்த்த புள்ள சுகமாச்சி.
சோத்த போட்ட தாயே இன்று சுமையாச்சு.
**********
காணிக்கை
கோவில் வாசலில்
  பிச்சைக்காரர்கள்!
சரி........
கோவிலுக்குள்ளே மட்டும் யாராம்?
**********
பிள்ளைகளே....
புத்தகங்களே
பிள்ளைகளைக்
கிழிக்காதீர்!
**********

உடைந்தது

ஒரு புதுக் கவிதை:

கண்ணாடி  டம்ளரை
குழந்தை   அழ அழ
அதன்  கையிலிருந்து  பிடுங்கி
உயரே வைத்தாள்   அம்மா.
உடைந்து போயிற்று
குழந்தையின் மனது!