Showing posts with label சிரிக்க சிந்திக்க. Show all posts
Showing posts with label சிரிக்க சிந்திக்க. Show all posts
அப்பாடா
ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் 'ஐயோ' என்றால் குதிரை நிற்கும்.'அப்பாடா' என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,'ஐயோ'என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக 'அப்பாடா' என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
அயிரை மீன்
ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.
ஜலதோஷம்
காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
ஆற்றில் விழுந்த அழகி
அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.
வீண் செலவு
மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும் அவருடைய மூன்று பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால் நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''
லஞ்சம்
ரவியும் கோபாலும் இரண்டு பணக்காரர்கள். ஒருவருக்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.ரவி தன வக்கீலிடம் கேட்டார்,''இந்த நீதிபதிக்கு நாம் லஞ்சம் கொடுத்தால் நமக்கு சாதகமாகத் தீர்ப்பு வருமா?'' வக்கீல் சொன்னார்,''ஐயையோ,அவருக்கு லஞ்சம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும்.லஞ்சம் கொடுக்க முயன்றால் தீர்ப்பு நமக்கு எதிராகவே முடியும்.''சில மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வந்தது.தீர்ப்பு ரவிக்கு சாதகமாகவே வந்தது.வக்கீலுக்கே இந்த வழக்கு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.எனவே தீர்ப்பைக் கேட்டவுடன் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.இருந்தாலும் தன மகிழ்ச்சியை ரவியிடம் தெரியப்படுத்தினார்.அப்போது ரவி சொன்னார்,''உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்,''வக்கீலுக்கு ஒன்றும் புரியவில்லை.ரவி விளக்கினார்,''அன்று நீதிபதி லஞ்சத்துக்கு எதிரானவர் என்றும் லஞ்சம் கொடுத்தால் தீர்ப்பு பாதகமாகி விடும் என்று சொன்னீர்கள் அல்லவா?அன்றே நான் ஒரு தொகையை கோபால் அனுப்பியதாக நீதிபதிக்கு அனுப்பி விட்டேன்.''
நிர்வாகத்திறமை
ஒரு நிறுவனத்தின் மேலாளராகபுதிதாக ஒருவர் சேர்ந்தார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர்.எனவே புதியவர் அவரிடம் திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார்.அவர் உடனே புதியவரிடம் மூன்று கவர்களைக் கொடுத்து சொன்னார்,''உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும்.அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்,''புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று கவர்களையும் வாங்கி வைத்துக் கொண்டார். ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடிவந்தது.உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார்.அதில்,''நான் புதியவன்.எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.''என்று எழுதியிருந்தது.அதேபோல அவரும்,''நான் இப்போதுதானே வந்திருக்கிறேன்.நிறுவனத்தைப்பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும்.''என்றார்.வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.அடுத்து ஒரு ஆண்டில் மறுபடியும் பிரச்சினை வந்தது.இரண்டாவது கவரை திறந்து பார்த்தார்.அதில்,''முன்பு மேலாளர் களாய் இருந்தவர்களைக் குறை சொல்,''என்றிருந்தது.உடனே அவரும் சொன்னார்,''பாருங்கள்,நான் என்ன செய்வது?இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை.எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.''வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள்.இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார்.அதில்.''உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்,''என்று எழுதப்பட்டிருந்தது.
ஏற்ற இடம்
வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர்.வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது.வணிகன் கேட்டான்,''இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' .எமதூதர் சொன்னார்,''மூன்று வழிகளில் ஒன்று பூமியிலிருந்து நாம் வந்த பாதை.ஒன்று சொர்க்கத்திற்குப் போவது.மூன்றாவது நரகத்திற்குப் போகும் வழி.நீ பூமியில் இருந்தபோது சில நல்ல காரியங்களும்செய்திருக்கிறாய்.சில கெட்ட காரியங்களும் செய்திருக்கிறாய்.எனவே நீ கொஞ்ச காலம் சொர்க்கத்திலும்,கொஞ்ச காலம் நரகத்திலும் இருக்க வேண்டும்.முதலில் எங்கு செல்வது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும்.''என்றார்.வணிகன் உடனே சொன்னான்,''என்னிடம் கேட்டால்,நான் இந்த இடத்திலேயே இருந்து விடுகிறேன்.எவ்வளவு அருமையான முச்சாலை சந்திப்பு!இங்கு மட்டும் ஒரு கடை வைத்து விட்டால் வியாபாரம் எப்படி இருக்கும்!எனக்கு சொர்க்கமும் வேண்டாம்.நரகமும் வேண்டாம்.''
Subscribe to:
Posts (Atom)