Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts
Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts

பிரிவு

பாரதப் போர் முடிந்தது.தர்மர் முடி சூட்டிக் கொண்டார்.கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது.வேதனையுடன் தர்மர் சொல்கிறார்,
''கண்ணா,எங்கள் தெய்வமே,
உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம்.
உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை ஆகும்.
உன்னைப்போ என்று சொன்னால் செய் நன்றி மறந்தவனாவேன்.
உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும்.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான்.உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும்.உன்னை மறவாதிருக்க வேண்டும்.''

வாய் சாமர்த்தியம்

ஒரு ராஜாவுக்கு தாராள மனசு.ஒரு நாள் மீனவன் ஒருவன் அழகான வண்ண மீனை ராஜாவிடம் கொடுத்தான்.உடனே ராஜா நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணிக்கு எரிச்சல்.ஒரு சாதாரண மீனுக்கு நூறு பொற்காசா என்று.ராஜாவை நச்சரித்து நூறு பொற்காசுகளை திரும்ப வாங்கச்சொல்லி ஒரு யோசனையும் சொன்னாள்.''இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்.பதில் சொல்லாவிடில் காசைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.''என்றாள்.அரசனும் மீனவனைக் கூப்பிட்டு அக்கேள்வி கேட்க ,அவன்,''இது ஆணுமல்ல ,பெண்ணுமல்ல,அலி.''என்றான்.இப்பதிலைக்கேட்டு பரவசமடைந்து அரசன் இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தான்.
ராணிக்கு மகாஎரிச்சல்.எப்படி இருநூறு பொற்காசுகளைத் திரும்ப வாங்குவது என யோசித்தாள்.
மீனவன் பொற்காசுகளைத் தூக்கிச் செல்லும் போது ஒரு காசு தவறி கீழே விழுந்தது.ராணி சொன்னாள்,''பாருங்கள்!இவன் பேராசைக்காரன்.இருநூறு காசில் ஒன்று விழுந்ததற்கே பெருந்தன்மை இல்லாது ஓடி எடுக்கிறானே, காசைத் திரும்ப வாங்குங்கள்.''
ராஜா கேட்டார்,''ஏன் இப்படி அற்பத்தனமாய் ந்கடந்து கொண்டாய்?''
மீனவனோ ,''ஒவ்வொரு காசிலும் உங்கள் முகமும் ,ராணியின் முகமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.அது கீழே விழுந்து யார் காலிலாவது பட்டால் உங்களுக்கு அவமானம்.அதனால் தான் எடுத்தேன்.''என்றான்.மகிழ்ச்சியுற்ற ராஜா அவனுக்கு இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணி இப்போது வாயைத் திறக்க வில்லை.

அவதூறு

ஒருவர் தன நண்பனைப் பற்றி ஒரு செய்தியை பலரிடம் பரப்பிவிட்டார்.பின்னர் தான் அது தவறான செய்தி,அவதூறு என்பதைப் புரிந்து கொண்டு வருந்தினார்.அவர் நபிகள் நாயகம் அவர்களிடம் சென்று தன தவறைக் கூறி பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா எனக் கேட்டார்.நபிகள் பத்து கோழி இறகுகளை அவர் கையில் கொடுத்து,அன்று இரவு பத்து வீட்டுக் கதவுகளில் சொருகி வைத்து விட்டு மீண்டும் காலை அவற்றை எடுத்துக்கொண்டு தன்னிடம் வரச்சொன்னார்.மறுநாள் காலை அவர் வெறுங்கையுடன் வந்தார்.விபரம் கேட்க,கோழிச் சிறகுகள் காற்றோடு பறந்து போய் விட்டதாகவும்,அவற்றை எடுத்து வர வழி இல்லை எனவும் கூறினார்.நபிகள் அப்போது சொன்னார்,''நீ பரப்பிய அவதூறு இக்கோழி சிறகுகள் போல்தான்.பரவிய அவற்றை ஒன்றும் செய்ய இயலாது.இனியேனும் இம்மாதிரித் தவறுகளைச் செய்யாதே.''

மூன்று பொன் மொழிகள்

அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை.

கருத்து வேறுபாடு

முஹம்மது நபி அவர்களின் மகள் பாத்துமா.பாத்துமாவின் குழந்தைகள் ஹசன்,ஹுசைன் .சிறுவர்களாயிருக்கும் போது ஒரு சிறு மன வருத்தம் காரணமாக ஒருவருக்கொருவர் பேசாதிருந்தனர்.கேள்விப்பட்ட தாய் அவர்களை அழைத்து நபிநாயகம் சொன்ன பொன் மொழிகளைச் சொன்னார்,''ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாதிருந்தால் அது அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்.''இளையவர் ஹுசைன் சொன்னார்,'அம்மா,இப்படிப் பேசாமல் இருக்கிற இரண்டு பேரில் எவர் முதலில் சலாம் சொல்கிறாரோ,அவருக்கே அதிக பலன் உண்டு என்று அண்ணல்நபிகள் சொல்லியிருப்பது எனக்குத் தெரியும்.அதனாலே அந்த பலன் அண்ணனுக்குக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் நான் முதலில் பேசாதிருக்கிறேன்.'இதைக் கேட்டதும் மூத்தவர் ஹுசேன் ஆனந்தக் கண்ணீருடன் தம்பியை அணைத்துக் கொண்டு சலாம் சொன்னார்.தம் பிள்ளைகளின் அறிவையும் அரிய பண்பையும் கண்டு தாய் மெய் மறந்து நின்றார்.
கருத்து வேறுபாடுகளை எப்போதும் நீடிக்க விடக் கூடாது.

புகழ்ச்சி

ஒரு யூத குரு புதிதாக ஒரு ஊருக்கு வந்தார்.ஊர் மக்கள் கூடி அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடத்த அனுமதி கேட்டனர்.சம்மதம் தெரிவித்த குரு வரவேற்பு விழாவுக்கு முன்னர் ஒரு அறையில் தனியாகச் சென்று தாளிட்டுக் கொண்டார்.வெளியிளிருந்தவர்களுக்கு அவர் ஏதேதோ பேசுவது கேட்டது.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரிடம் விளக்கம் கேட்டனர்.''இன்றைய கூட்டத்தில் என்னை அளவுக்கு மீறி புகழ்வீர்கள்.அது என்னுள் அகந்தையை வளர்க்கும்.கூட்டத்தில் நீங்கள் எப்படியெல்லாம் புகழ் வீர்களோ அதை எனக்கு நானே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டேன்.இப்போது அந்த சொற்கள் எனக்கு மிகவும் பழகி விட்டன.நீங்கள் அவற்றை உபயோகிக்கும் போது என்னுள் எந்த பாதிப்பும் ஏற்படாது.''என்றார் அவர்.

எளிமை

ஒரு ஞானி ஒரு அரசனிடம் அகந்தை பற்றியும் எளிமை பற்றியும் விளக்கிச் சென்றார்..உடனே அரசன் அரச உடைகளை விட்டு சாதாரண உடை உடுத்தினான்.அரண்மனையைவிட்டு ஒரு குடிசையில் குடியிருந்தான்.சிறிது நாளில்,தன்னைப் போல் ஒரு எளிமையான அரசன் எங்கும் இருக்க மாட்டான் என எண்ணினான்.ஆனால் சிறிது யோசிக்கையில் இந்த எண்ணமே ஒரு அகந்தை தானே என்று நினைத்து ஞானியிடம் சென்று விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்,''நீ அரச உடையிலேயே இரு;அரண்மனையிலேயே வாழ்;ஆனால் மனதளவிலே எளிமையாக வாழ்ந்து வா.''

பெறுமானம்

தன நாட்டையும் செல்வத்தையும் குறித்து மிகவும் கர்வம் கொண்டிருந்த ஒரு அரசன் ஒரு ஞானியைப் பார்க்க சென்றிருந்தார்.அவரைப் பற்றி நன்கு அறிந்த ஞானி அவரை வரவேற்றபின் பேச ஆரம்பித்தார்.
ஞானி ;நீங்கள் ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்.கடுமையான தாகம்.எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.தாகத்தால் நாவறட்சி.அப்போது ஒருவன் ஒரு அழுக்குப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக்  கேட்டால் என்ன செய்வீர்கள்?
அரசன்; சந்தேகம் என்ன?தண்ணீரை வாங்கி பாதி நாட்டைக் கொடுப்பேன்.
ஞானி;  சரி,அந்த அழுக்கு தண்ணீரைக் குடித்ததால் வியாதி வந்து யாராலும் குணப்படுத்த முடியாத நிலையில்,யாராவது ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகையைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மீதி நாட்டையும் கேட்டால் கொடுப்பீர்களா?
அரசன்; கட்டாயம் மீதி நாட்டைக் கொடுத்து மூலிகையைவாங்குவேன்.
ஞானி;  அப்படியானால்,கேவலம் ஒரு பாத்திர அழுக்கு நீரும்,ஒரு  மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து  உங்களுக்கு ஏன் கர்வம்?
அரசன் வெட்கத்தினால் தலை கவிழ்ந்தார்.

பொறுமையாக யோசி

மூத்தாள் மகனை இளையாள் வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்து கொண்டிருந்தாள்.பரிதாபப்பட்ட கணவனிடம் அவள் சொன்னாள்,''நான் ஒரு காரியம் சொல்வேன்.அதை அவன் செய்து விட்டால் என் பிள்ளை போல வைத்துக் கொள்வேன்.இல்லையெனில் வெளிய துரத்தி விடுவேன்.நம் வீட்டிலிருக்கும் ஆடுகளை சந்தைக்குக் கொண்டு போய் விற்க வேண்டும். ஆனால் நமக்கு உணவு வாங்குகிற அளவுக்கு மேல் பணம் வரக் கூடாது.வேறு எந்த செலவும் செய்யக் கூடாது.மீதிப் பணமும் இருக்கக் கூடாது.ஆடுகள் திரும்ப வர வேண்டும்.இது தான் நான் சொல்லும் வேலை.''
தகப்பனுக்குத் தலை சுற்றியது.இது மகனை ஒரேயடியாக விரட்டும் வழி என்று தோன்றியது.விற்ற ஆட்டை எப்படி வீட்டுக்குக் கொண்டு வருவது?இருக்கும் ஆடுகளை விற்றால் ஒரு மாத உணவுக்குப் பணம் கிடைக்குமே?மூவருடைய சாப்பாட்டுக்கு வரும் அளவிற்கு எப்படி விற்பது?
மகன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டே சந்தைக்குப் போனான்.திடீரென ஒரு யோசனை.அதன் படி செய்தான் வெற்றியும் கண்டான்! அப்படி என்ன செய்தான்?
ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்,சந்தையில் அவற்றின் கம்பளியை  மட்டும் மூவரின் உணவுத் தேவைக்கு வரும் அளவிற்குக் கத்தரித்து அதை விற்று மூவருக்கு உணவு வாங்கிக் கொண்டு,கையில் பணம் ஏதும் மீதமில்லாமல் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான்.
பொறுமையாக யோசித்தால் எந்த சோதனையையும் சந்திக்கலாம்!

அபிப்பிராயம்

ஒரு சிறந்த ஓவியன்.அழகான  மனித ஓவியம் ஒன்றை வரைந்து வைத்திருந்தான்.வருவோர் போவோர் அனைவரும் அந்த ஓவியத்தை ரசித்துப் பார்த்துச் சென்றனர்.ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அங்கு வந்து ஓவியத்தை கவனமுடன் பார்த்தான்.பின்னர் ஓவியனிடம் சென்று,''இதில் ஒரு குறை இருக்கிறது.அதை  நான் சொல்லலாமா?''என்று கேட்டான்.ஓவியர் சம்மதிக்கவே அவன் சொன்னான்,''தங்கள் ஓவியத்தில் இருக்கும் மனிதனின் செருப்பு சரியாக வரையப்பட வில்லை,''என்று கூறி அது எப்படி இருக்க வேண்டும் என்பதனை விளக்கி சொன்னான். ஓவியரும் அவன் சொல்லுவதை உன்னிப்பாகக் கவனித்து அந்த ஓவியத்தில் தேவையான மாற்றங்கள் செய்தான்.அடுத்து அந்தத் தொழிலாளி,''உங்கள் ஓவியத்தில் கண் இமைகள் சரியாக வரையப்படவில்லை,''என்றான். ஓவியர் அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் செருப்பு தைப்பதிலே  வல்லுநர்.அதனால் அது சம்பந்தமாக நீங்கள் சொன்ன மாற்றங்களை செய்தேன்.அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.''
உலகில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சினைகள் ஏது?

மேலான வாழ்க்கை

ஒரு நகரத்தின் மதில் பிளவு ஒன்றில் கொத்து மலர்கள் பூத்துக் குலுங்கின.பாதுகாப்பான இடத்தில் அவை அமைந்திருந்ததால் காற்று,புயல்,மழை, வெயில் இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.
மதிலுக்கு அந்தப் பக்கம்,தரையில் ஒரு ரோஜாப் புதர் இருந்தது.ரோஜாக்களின்  அழகு,மதில்  மேல் இருந்த காட்டு மலர்களின் அழகை மங்க செய்து கொண்டிருந்தன.அவமானப்பட்ட அந்த மலர்கள் கடவுளிடம் ரோஜா மலர்களாக மாற்றும்படி வேண்டிக்கொண்டன.கடவுள் சொன்னார்,''ரோஜாவின் வாழ்க்கை சிரமமானது.புயலடித்தால் வேரோடு ஆடும்.மலர்ந்தால்,பறிக்க வருவார்கள்.இப்போது இருக்கும் பாதுகாப்பான நிலையை ஏன் இழக்க வேண்டும்?''
பக்கத்திலிருந்த வேறு காட்டு மலர்களும் ரோஜாவாகி இன்னல்களை அனுபவிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டன.அனால் அம்மலர்கள் கடவுளிடம் ஒரு நாள் முழுவதுமாவது ரோஜாவாக மாற வேண்டிக்கொண்டன.
கடைசியில் கடவுள் சம்மதித்துவிட்டார்.மலர்கள் ரோஜாவாக மாறிவிட்டன. உடனே சோதனைகளும் சிக்கல்களும் ஆரம்பமாகிவிட்டன.புயலும் மழையும் அதன் வேர்களையே அசைத்தன.பின் வெயில் அதன் இதழ்களைக் காய வைத்து விட்டன.மழை அடித்து,அதை அடியோடு பெயர்த்துக் கீழே தள்ளி விட்டது.அவை எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தன.
காட்டு மலர்கள் சொல்லின,''நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.முன்பு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது?சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பழக்கப் பட்டவையாய் இருந்தன.  நம்மால்சமாளிக்க  கூடியவை.இப்போது சிக்கலில் வம்பாக மாட்டிக் கொண்டீர்கள்.''

 மாறிய ரோஜா ஒன்று  சொன்னது,'நீங்கள் மடையர்கள்.பாதுகாப்பான சூழலில் மதில் மேல் காலம் பூராவும் உப்பு சப்பில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் ஆபத்தான சூழலில் ரோஜாவாய் வாழ்வது மேல்.நான் கதிரவனோடு உறவாடினேன்.விண்மீன்களுடன் பேசினேன்.என்   ஆன்மாவை நான் பெற்றேன்.பூரண நிறைவடைந்தேன்.நான் முழுதாக வாழ்ந்து விட்டேன்.இப்போது முழுதாக இறக்கப் போகிறேன்.ஆனால்,உங்கள் வாழ்வு,வாழும் மரணம் மட்டுமே.''
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை,மந்தமான,இருண்ட,செத்துப் போன வாழ்வைக் காட்டிலும் மேலானது.ஒளி மயமானது.
                                                                                          __ஓஷோ

கலங்கிய கண்கள்

1965  பாகிஸ்தான் யுத்தத்தில் பூபிந்தர் சிங் என்ற ராணுவ அதிகாரி அடிபட்டு  மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவரைப் பார்க்க வந்தார்.படுக்கையில் நகர முடியாமல் கிடந்த பூபிந்தரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.''தீரத்துக்கும் துணிச்சலுக்கும்  பெயர் பெற்ற பஞ்சாபியர் எதற்கும்  கலங்க மாட்டார்களே?அப்படிப்பட்ட உங்கள் கண்களில் நீரா!''என்று ஆச்சரியத்துடன் வினவினார் பிரதமர்.அப்போது பூபிந்தர் சிங் சொன்னார்,''நான் சாவுக்காகக் கலங்கவில்லை.நாட்டின் பிரதமர் வந்துள்ளாரே,அவரைப் பார்த்தவுடன் எழுந்து விறைத்து  நின்று கம்பீரமாக ஒரு  சல்யூட் செய்ய இயலவில்லையே என்று தான் எனக்கு வேதனையாக உள்ளது.''
இப்போது கலங்கியது எதற்கும் அஞ்சாத சாஸ்திரியின் கண்கள்!

கிண்டல்

நிக்கோலாஸ் என்பவன் 1825 ல் ரஷ்யாவில்  ஜார் மன்னனாக  அரியணை ஏறினான்.அவன் அரியணை ஏறியதும் நாடு முழுக்க,ஐரோப்பிய நாடுகளைப் போல நாகரீகம் கொண்டு வர வேண்டும் என்று கூறி ஒரு கூட்டம் புரட்சியில் ஈடுபட்டது.அந்தக் கூட்டத்தின் தலைவன் ரைலேஎவ் என்பவனை மன்னன் பிடித்து மரண தண்டனை வழங்கினான்.புரட்சியையும் அடக்கினான்.
ரைலேஎவ்  தூக்கு மேடை ஏறினான்.தூக்குக் கயிறு மாட்டப் பட்டது.விசையை அழுத்தும் போது திடீரெனக் கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். ரஷ்யாவில்  அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு.இது மாதிரி தூக்கில் இட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டால் அதைக் கடவுளின் ஆணை என்று கருதி குற்றவாளியை மன்னித்து விட வேண்டும். இதனால் தூக்கிலிருந்து தாம் தப்பி விட்டோம் என்பதை உணர்ந்த ரைலேஎவ்,''பாருங்கள்,,ரஷ்யாவில் ஒரு கயிறைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை.ரஷ்யாவை ஆள்பவர்களுக்கு எதுவுமே தெரியாது.''என்று கேலியாகக் கூறினான்.ரைலேஎவைத்  தூக்கிலிடும் போது நடந்த நிகழ்ச்சியை காவலன் ஒருவன்  மன்னனிடம் போய்ச் சொன்னான்.மன்னனும் நடைமுறை கருதி ரைலேஎவை மன்னிக்கும் ஆணையை தயார் செய்யச் சொன்னான்.அப்போது தற்செயலாக,மன்னன்,காவலனிடம்,''ரைலேஎவ் இது பற்றி ஏதாவது பேசினானா ?''என்று கேட்டான். காவலன் அவன் பேசிய விபரத்தைச் சொல்ல மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே மன்னிப்பு ஆணையை கிழித்தெறிந்தான்.அவனை மீண்டும் தூக்கிலிட உத்தரவிட்டான். மறுநாள் ரைநேஎவ் தூக்கிலிடப்பட்டான்.இம்முறை கயிறு ஒன்றும் ஆகவில்லை
நம் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரு முறை வெளியே வந்து விட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.எனவே வார்த்தைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும்.குறிப்பாகக் கேலி,கிண்டல்  பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.கேலி செய்யும் போது ஏதோவொரு இன்பம் தோன்றும்.ஆனால் அது தற்காலிகமானது.ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது..

தாய் மொழி

ராஜா டோஜ்ஜின் தன் அரண்மனையில் அறிஞர்களுக்கு மிக முக்கியத்துவம்  கொடுத்தார்.எனவே காளிதாசர் உட்படப் பல அறிஞர்கள் அங்கே குவிந்திருந்தனர்.ஒரு நாள் அரசவைக்கு வந்த ஒருவன்,தான் முப்பது மொழிகளில் சரளமாகப் பேச வல்லவன் என்றும் அதில் எது அவன் தாய் மொழி என்று கண்டு பிடிக்கும் அறிஞருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகவும்,கண்டுபிடிக்க முடியாவிடில் ஒவ்வொரு அறிஞரும் தலா ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டும் என சவால் விட்டான்.எல்லா அறிஞர்களும் இப்போட்டியில் தோற்றனர்.அவன் எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசியதால் யாராலும் வித்தியாசம் காண இயலவில்லை. காளிதாசர் அவனை மேடைக்கு அழைத்து,அவன் கடைசிப் படியில் ஏறியதும் அவனைப் பிடித்துக் கீழே தள்ளினார்.அவன் படிக்கட்டிக்களில் உருண்ட போது கோபத்தில் கத்தினான்.காளிதாசர் சொன்னார்,''இப்போது எந்த மொழியில் கத்தினாயோ,அது தான் உனது தாய்  மொழி,''என்றார்.அவன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
கோபத்தில் உங்கள் நினைவு உங்கள் வசம் இருப்பதில்லை.மேலும் இது தன் சவாலுக்கு பதில் என்பதை அவன் உணரவில்லை.அவனது மனதின் அடி ஆழத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது அவனது தாய் மொழி தான்.

சகோதரி

அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.போரஸ் வெற்றிமுகத்தில் இருந்தார்.ஒரு நாள் மாலை போருக்குப் பின் தன் கூடாரத்தில் இருந்த போது ஒரு பெண்மணி அவரை நோக்கி வந்தார்.அந்தப் பெண் அலெக்சாண்டரின் மனைவி என்பதை அறிந்து கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.அந்தப்பெண்,போரில் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்று வேண்டினாள்.பின் திடீரென ஒரு ரக்ஷாபந்தன் கயிறினைப் போரஸின் கரத்தில் கட்டினாள்.பின் வந்த வழியே  சென்று விட்டாள்.
 மறுநாள் கடுமையான போர் நடந்தது.போரஸ் அலேக்சாண்டரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனைந்த போது தன் கையிலிருந்த ரக்ஷா பந்தன் கயிறினைக் கவனித்தார்.உடனே ஈட்டியை பின்னோக்கி இழுத்து விட்டுசொன்னார்,''உன் மனைவி என் சகோதரி.அவள் விதவையாகக் கூடாது.''

லைலா மஜ்னு

லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில்  மஜ்னு என்றால்  பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர்  கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''

பாவம்

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

பொம்மை

ஏழை ஒருவனின் குழந்தை. தன தாயிடம் சொன்னது,''அம்மா,எனக்கு இந்த மண் பொம்மை வேண்டாம் .பார்,எல்லாம் உடைந்து இருக்கிறது.பக்கத்து வீட்டு அண்ணன் நல்ல நல்ல பொம்மைகள் எல்லாம் வைத்திருக்கிறான்.அது போல பொம்மைகள் வாங்கித்தா.''அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அந்த  ஏழைத்தாய்.
பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு.அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப் பெண்.விளையாட வித விதமான பொம்மைகள். விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான்,''ஆயா,எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம்.பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான்.எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தை,பொன்னுக்கும்,மண்ணுக்கும் போராடுகிறது வளர்ந்த பின். என்றென்றும் குழந்தையாய் இருந்தால்  இவ்வுலகில் ஏனிந்த சண்டை,ஏனிந்த வேற்றுமை?
                                                             மூலம் ;ஒரு இந்திக் கவிதை

உணர்வு

ஒரு பிச்சைக்காரன்,தினசரி பிச்சை எடுக்கும் போது பலர் கேலி செய்தனர்.அவனைத் தாழ்வாகப் பேசினர்.ஏளனம் செய்தனர்.அப்போதெல்லாம் அவனுக்கு மிகவும் அவமானமாகவும் மனம் பாதிக்கவும் செய்தது.அதிர்ஷ்டவசமாக சில நாட்களில் அவன் ஒரு ராஜா ஆகி விட்டான்.உலகின் எல்லா இன்பங்களும் கிடைக்கப் பெற்றன.அப்போது அவன் பழைய பிச்சைக்காரன் போல ஒரு நாள் திரியத் திட்டமிட்டு அவ்வாறே மாறு வேடம் புனைந்து நகருக்குள் சென்று பிச்சை கேட்டான்.இப்போதும் பலர் கேலி செய்தனர்.ஏளனம் செய்தனர்.ஆனால் அவனுக்கு இப்போது அவமான உணர்வு ஏற்படவில்லை.மனம் பாதிக்கப் படவில்லை.ஏனெனில் அவனுடைய உள்ளுணர்வில் தான் ராஜா என்பதும் தனக்கு இந்த தேசமே சொந்தம் என்ற எண்ணங்களும் இருந்தன.

புத்திசாலி

'ஒரே ஒரு ரூபாய் வைத்து,அதற்குள் எள்,புண்ணாக்கு,எண்ணெய்,விறகு  இத்தனையும் வாங்கிக் கொடுத்து மீதிச் சில்லரையும் தருபவர் தான் என் கணவர்,'என்றாள் ஒரு அழகான இளம்பெண்.கல்யாணம் நடக்குமா என்று கவலை கொண்டார் அவள் தந்தை.ஒருவன் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய்,அரை ரூபாய்க்கு ஒரு விவசாயியிடம் எள் செடி வாங்கிக் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீதி காசையும் கொடுத்தான்.பின் அவன் விளக்கம் சொன்னான்,''இச்செடியில் எள் இருக்கிறது.எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது.புண்ணாக்கும் இருக்கிறது.எள் செடி காய்ந்தால் விறகு.''புத்திசாலி கணவனைக் கண்டுகொண்டாள் அந்தப் பெண்..