Showing posts with label முல்லா நகைச்சுவைகள். Show all posts
Showing posts with label முல்லா நகைச்சுவைகள். Show all posts

முல்லா

முல்லா உளவியல் மருத்துவரிடம் சென்றார்.''எனக்கு ஒரே குழப்பம்.ஏதாவது செய்யுங்கள்.சகிக்க முடியவில்லை.இரவு முழுவதும் ஒரே கனவு வந்து என்னை வாட்டி வதைக்கிறது.நான் ஒரு மூடிய கதவருகே நிற்கிறேன்.தள்ளுகிறேன்,தள்ளுகிறேன்,தள்ளிக்கொண்டே இருக்கிறேன்.கதவைத் திறக்க முடிய வில்லை.பிறகு விழித்துக் கொள்கிறேன்.வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.

எது நரகம்?

முல்லா இறந்து விட்டார்.அவரது இரண்டு சீடர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.மூவரும் மறு உலகின் அழகிய வாயிலைத் தட்டினர்.''இது தான் நான் உங்களுக்கு வாக்களித்தது.நாம் சொர்க்கத்திற்கு வந்து விட்டோம்.''என்றார் முல்லா.
வழிகாட்டி .அவர்களை அழகிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.''இனி முடிவே இல்லாமல் இங்கே இருக்கப் போகிறீர்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.உடனே நிறைவேற்றுகிறேன்.''என்றான் வழிகாட்டி.
கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது.ஆசைப் பட்டதெல்லாம் நிறைவேறியது.
ஆனால் ஏழு நாட்களில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது.கேட்பதற்கும் கிடைப்பதற்கும் இடைவெளி இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.
வழிகாட்டியிடம் முல்லா,''நாங்கள் எங்கள் பூமியைப் பார்க்க விரும்புகிறோம்.கொஞ்சம் ஜன்னலைத் திறக்க முடியுமா?''என்று கேட்டார்.
'எதற்கு?'என்று கேட்டான் அவன்.
''எங்கள் ஆவலை மேலும் கிளறி விட.''என்றார் முல்லா.
அவன் கதவைத் திறந்தான்.கீழே பூமியில் மக்கள் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.இந்த முரண்பாட்டில் அவர்களது ஆர்வம் மேலும் கிளர்ந்தது.
அடுத்த ஏழு நாட்களில் அவர்களுக்கு மீண்டும் சலிப்பு ஏற்பட்டது.பூமியைப் பார்ப்பதில் இனி பயன் இல்லை.அதனால் முல்லா,''கொஞ்சம் நரக வாசலைத் திறந்து காண்பியப்பா,அதைப் பார்த்தால் எங்கள் ஆசைகள் புத்துணர்வு பெரும்.''என்றார்.
அதற்கு அவன் சிரித்தபடி சொன்னான்,''நீங்கள் எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?இது தான் நரகம்.''
ஆம்,அவர்கள் இதுவரை இருந்தது நரகம்!
உங்களது எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுவது தான் நரகம்!

அழுகை

மன்னர் கண்ணாடியில் தன அசிங்கமான தோற்றம் கண்டு சிறிது நேரம் அழுதார்.இதைக் கண்டு பின்னால் இருந்த முல்லாவும் அழத் தொடங்கினார். அரசர் அழுகையை நிறுத்திய பின்பும் முல்லா நிறுத்தவில்லை.''எனக்காக வருத்தப்பட்டு நானே கொஞ்ச நேரம் தானே அழுதேன்?நீ ஏன் விடாமல் அழுகிறாய் முல்லா?''என்று கேட்டார் அரசர்.'கண்ணாடியில் ஒரு நிமிடம் உங்கள் முகத்தைப் பார்த்ததற்கே அழுதீர்களே?நான் உங்களைக் காலம் பூராவும் பார்க்கிறேனே,அதற்காகத்தான் கொஞ்சம் அதிகமாக அழுகிறேன்.' என்றார் முல்லா.

உலகம் அழியும்

முல்லாவிடம் ஒரு கொழுத்த ஆடு இருந்தது.சிறுவர்கள்,அதை வெட்டி விருந்து வைக்கச் சொல்லி முல்லாவை நச்சரித்தனர்.முல்லாவிற்கு மனம் இல்லை.சிறிது நாள் போகட்டும் என்றார்.சிறுவர்களோ விடவில்லை.''முல்லா,நாளை உலக அழியப் போவது உனக்குத் தெரியாதா?அதனால் இன்றே விருந்தை வைத்துக் கொள்ளலாம்.''என்றனர். முல்லா உடனே உல்லாசப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்து,அங்கு சென்று ஆட்டை வெட்டினார்.முல்லா சமைக்க ஆரம்பிக்கும் முன் சிறுவர்கள் அங்கிருந்த குளத்தில் குளிக்கப் போனார்கள்.முல்லா சமைக்க ஆரம்பித்தார்.சிறுவர்கள் குளித்து வந்த பின் பார்த்தால்,அவர்களின் ஆடைகளைக் காண வில்லை.முல்லாவிடம் அது பற்றி விசாரித்தனர்.முல்லா சொன்னார்,''அடே,உலகம் நாளை அழியப் போகிறது. உங்களுக்கு ஆடைகள் எதற்கு?எனவே உங்கள் ஆடைகளை அடுப்பில் போட்டு தான் சமையல் செய்தேன்.''முல்லாவை ஏமாற்ற நினைத்த சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

கடவுள் அருள்

மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால்  கடவுள்  அருள்  பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.

நீ யார் கேட்க?

மேல் மாடியில் இருந்தவர்கள் எப்போதும் இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.கீழ்ப் பகுதியில் இருந்த முல்லா,''ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?எங்களால் தூங்க முடியவில்லை.''என்றார்.மேல் மாடியில் இருந்தவர்கள் சொன்னார்கள்,''நாங்கள் வாடகை கொடுக்கிறோம்;என்ன வேண்டுமானாலும் மேல் மாடியில் செய்வோம்.நீ யார் அதைக் கேட்க?'' உடனே முல்லா,கீழே வந்து வீட்டின் கீழ்ப் பகுதியைக் கடப்பாரையால் இடிக்க ஆரம்பித்தார்.உடனே மேல் மாடிக்காரர்கள் கேட்டார்கள்,''கீழ் பகுதியை இடித்தால் மேல் பகுதியும் விழுந்து விடுமே?ஏன் இடிக்கிறீர்கள்?''முல்லா சொன்னார்,''கீழ்ப் பகுதிக்கு நான் வாடகை கொடுக்கிறேன்;கீழ்ப் பகுதியில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.அதைக் கேட்க நீ யார்?''மேல் மாடிக்காரர்கள் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்தார்கள்.

மதுபோதை

முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு சென்று,நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக் கண்ணைக் கசக்கிக் கசக்கிப்  பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.எனவே முல்லா அவனிடம் சொன்னார்,''நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம் என்று எண்ணாதே.நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.''அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்,''நீங்கள் நால்வருமா?''

சபதம்

முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,''இந்த ஆண்டு நான் குடிக்க மாட்டேன்,''என்று சபதம் செய்தார்.அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது.அவர் கடையைத் திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க மகிழ்ச்சி.''முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது அருந்தலாம்.''என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய் மது அருந்தினார்.

தாயின் நினைவு

எந்த உணவு கொடுத்தாலும்,''இது எனக்குப் பிடித்தமானதாயிற்றே,''என்று சொல்லி ஒரு வெட்டு வெட்டுவது முல்லாவின் வழக்கம்.அவனுக்குப் பாடம் கற்பிக்க அரசர் ஒரு விருந்து வைத்தார்.விருந்தில் வைத்த எல்லா உணவுகளையும் ,''எனக்கு இது ரொம்பப் பிடிக்கும்,''என்று சொல்லியவாறு சாப்பிட்டான்.விருந்தின் முடிவில் மிளகாய்த்தூள் மிக அதிகமாகச் சேர்த்து மீன் வறுவல் பரிமாறப்பட்டது.அதை சாப்பிடும்போது முல்லாவின் நாக்கு துடித்தது.மூக்கிலும் கண்களிலும் நீர் வடிந்தது.அரசர்,''முல்லா,ஏன் கண்ணீர் வடிக்கிறாய்?மீன் பிடிக்கவில்லையா?"என்று கேட்டார்.முல்லா சொன்னான்,''அரசே,என் தாய் தினமும் இப்படித்தான் காரமான மீன் கறி சமைத்துப் போடுவாள்.இப்போது அவள் உயிருடன் இல்லை.இதை சாப்பிட்டதும் எனக்கு என் தாயின் நினைவு வந்து விட்டது.அதனால் என்னையறியாது கண்ணீர் வந்து விட்டது.''முல்லா சமாளித்த திறமையைக் கண்டு அரசருக்கு ஆச்சரியம்.

எங்கேயிருந்து?

முல்லா,ஒரு கப்பல் கம்பெனியில்  நடந்தநேர்முகத்தேர்வுக்கு சென்றார்..கம்பெனியின் மேனேஜர்,''முல்லா,இது ஆபத்தான வேலை.கடலில் கொந்தளிப்புகள் ஏற்பட்டு பெரும் அலைகள் வரும்.அதிலிருந்து உன் கப்பலைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுப்பாய்?''என்று கேட்டார்.முல்லா,''இது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.கப்பலில் உள்ள கனமான பொருளை எடுத்து  லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜர்,''அடுத்து இன்னொரு பெரிய அலை வந்தால் என்ன செய்வாய்?''என்று கேட்க முல்லாவும்,''இன்னும் கொஞ்சம் கனமான பொருட்களை இன்னொரு லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜரும் திருப்பத் திரும்ப அடுத்து அலை வந்தால்  என்ன செய்வாய் என்று கேட்க முல்லாவும் சளைக்காமல் அதே பதிலை சொன்னார்.கடுப்படைந்த மேனேஜர்,''இவ்வளவு லேங்கர்களுக்கு எங்கே போவாய்?''என்று கேட்டார்.முல்லாவும்,''நீங்கள் இவ்வளவு அலைகளுக்கு எங்கே போவீர்களோ,அங்கே,''என்றார்.