Showing posts with label ஓஷோ -நகைச்சுவை. Show all posts
Showing posts with label ஓஷோ -நகைச்சுவை. Show all posts

சாதாரணக் கணக்கு

முதல் சோவியத் விண்வெளிப் பயணிகள் நிலாவில் இறங்கினார்கள்.அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.ஆனால் அங்கு மூன்று சீனர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.அதிர்ச்சி அடைந்தார்கள்.
''எங்களுக்கு முன்னால் எப்படி வந்தீர்கள்?அந்த அளவுக்கு உங்களிடம் தொழில் நுட்பம் கிடையாதே?''என ரஷ்யர்கள் கேட்டார்கள்.
அதற்கு சீனர்கள்,'இதிலென்ன அதிசயம்.இது ஒரு சாதாரண கணக்குதான்.நாங்கள் ஒருவர் தோளில்ஒருவர் ஏறி நின்றோம்.வந்து சேர்ந்து விட்டோம்.'என்றார்கள்.

தளபதி

ஒரு ராணுவ கேப்டன் எப்போதும் குடி போதையில் இருப்பதை தளபதி தெரிந்து கொண்டார்.கேப்டன் நல்ல மனிதன் தான்.குடிகாரர்கள் நல்லவர்கள் தான்.ஆனால் குறுக்கு வழியில் போகிறவர்கள்.அவ்வளவுதான்.
''நீ நல்லவன் உன்னை நான் பாராட்டுகிறேன்.ஆனால் உன்னை நீ பாழாக்கிக் கொண்டிருக்கிறாய்.நீ மட்டும் குடிக்காமல் தெளிவாக இருந்தால் விரைவில் ஒரு கர்னல் ஆகி விடுவாய்.''என்றார் தளபதி.
அது கேட்டு அவன் சிரித்தான்.'அது தேவையேயில்லை.குடியை விட்டால் வெறும் கர்னல் தானே ஆக முடியும்.நான் குடித்தால் தளபதி ஆகி விடுகிறேனே.'

என்ன நோய்?

மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த பெண்மணி ஒருவரை மருத்துவர் பார்க்க வந்தார்.அவளுடைய அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்தார்.வெளியே காத்திருந்த அவளுடைய கணவனிடம்,''ஒரு கார்க் ஸ்க்ரு வேண்டும்''என்று கேட்டார்.
சீசாவின் கார்க்கை எடுக்கும் ஸ்க்ரு எதற்கு என்று குழம்பியபடி அதை தேடி எடுத்துக் கொடுத்தான்.மருத்துவர் மீண்டும் உள்ளே போய் விட்டு ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''இப்போது ஸ்க்ரு டிரைவர் வேண்டும்,''எனக் கேட்டார்.
கணவனுக்கு ஒரே வியப்பு.எதற்கு என்று கேட்கவில்லை.டாக்டருக்குத் தெரியாதா என்று மௌனமாக எடுத்துக் கொடுத்தார்.
டாக்டர் உள்ளே போய் விட்டு,ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''ஒரு அரமும் சுத்தியும் வேண்டும்,''எனக் கேட்டார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத கணவன் 'என் மனைவிக்கு என்னதான் ஆச்சு?'என்று கேட்டான்.
''அது இன்னும் தெரியவில்லை.என் பையைத் தான் திறக்க முடியவில்லை.''என்றார் டாக்டர்.

தாக்குதல்

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த குடியிருப்பில் பேசுவது கேட்கவே செய்யும்.ஒரு அடுக்கு மாடி வீட்டில் அனைவரும் ஒரு விஷயத்தைப் பற்றி புதிராக உணர்ந்தனர்.ஒவ்வொரு தம்பதியினரும் சண்டையிட்டுக் கொண்டும் கூச்சலிட்டுக்  கொண்டும் இருக்க,ஒருவர் வீட்டிலிருந்து மட்டும் எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்க முடிந்தது.ஒரு நாள் விபரம் அறிய அனைவருமொன்று கூடி அவரிடம் கேட்டார்கள்.அவர் சொன்னார்,''என்னை வற்புறுத்தாதீர்கள்.அந்த ரகசியம் அவமானகரமானது.''அனைவரும் மிக வற்புறுத்திக் கேட்க அவர்  சொன்னார்,''என் மனைவி சாமான்களை என் மீது வீசுவாள்.அவள் குறி தவறினால் நான் சிரிப்பேன்.என்னைத் தாக்கி விட்டால்  அவள் சிரிப்பாள்.நான் அவள் தாக்குதலை தவிர்க்க கற்றுக் கொண்டுள்ளேன், அவள் என்னை எப்படித் தாக்குவது என்று கற்றுக் கொள்கிறாள்.''
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை  இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''

சந்தர்ப்பம்

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.''என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில்  செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,''என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,''ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்''என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,''நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?''என்று கேட்டான்.

அடிப்பது யார்?

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள்.;;இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?''என்றான் ஒருவன்.''அதனாலென்ன,நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று.''என்றான் மற்றவன்.''நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும்,தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?''என்றான் முதல்வன்.''சரி,அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.''என்றான் மற்றவன்.

தையல்காரன்.

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு.அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து,சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை குட்டையாக இருந்தது.அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான்,''இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி.இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும்.கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.''சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது.இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு,''கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள்.சரியாக இருக்கும்.இவ்வளவு நல்லதுணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.'' என்றான் சம்பாச்சு.வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.வழியில் ஒருவன் அவனைப் பார்த்து,'இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது.இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.'என்றான்.சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம்.''எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,
 ''எனக்கு எப்படித் தெரியும்  என்றா கேட்கிறீர்கள்?சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.''

அப்பனும் வருவான்

செருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய  மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது.சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார்.அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன்.அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.'