Showing posts with label ஓஷோ-சிந்தனைகள். Show all posts
Showing posts with label ஓஷோ-சிந்தனைகள். Show all posts

தகுதியற்றவர்

மனித சமுதாயத்தில் எல்லோருக்கும் எதிராக,எல்லா இடங்களிலும் செய்து வரப்படும் குற்றங்களில் ஒன்று:நீங்கள் தொடர்ந்து,தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டு,பக்குவப்படுத்தப்பட்டு இருகிறீர்கள்.ஒரு முறை நீங்கள் தகுதியற்றவர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால்,நீங்கள் இயற்கையாகவே மூடிக் கொள்கிறீர்கள்.உங்களுக்கு சிறகுகள் உள்ளன.நீங்கள் சும்மா சிறகை விரித்தால் போதும்,முழு வானமும் உங்களுடையதாகிவிடும்.எல்லா விண் மீன்களுடனும் அது உங்களுக்கு சொந்தமாகும் என்பதை உங்களால் நம்ப முடிவதில்லை.இந்த 'தகுதியற்றவர்கள்' என்பது ஒரு வெறும் கருத்து மட்டுமே.நீங்கள் அந்தக் கருத்தில் மதி மயங்கியிருக்கிறீர்கள்.யாருமே தகுதியற்றவர்கள் இல்லை.உயிர் வாழ்தல் தகுதியற்றவர்களை உருவாக்குவதில்லை.

நான் அறியவில்லை

'எனக்குத் தெரியும்'என நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக இருக்கிறீர்கள்.அதன் பின் கதவு திறப்பதில்லை.ஆனால் எனக்குத் தெரியாது எனச் சொல்லும் போது அதன் பொருள்,நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்.'நான் அறிந்திருப்பது எதுவாயினும் அது அற்பமானதே,வெறும் குப்பையே!'என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.புத்தரைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது அல்ல அறிவு.நீங்களே ஒரு புத்தராகும் போது அதுதான் அறிவு.'நான் அறியவில்லை'என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு.இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும்.அகங்காரம் மறையும்.அறிவே அகங்காரத்தின் தீனி.

சொந்த விஷயம்

எனக்கு ரோஜாப்பூ தான் பிடிக்குமென்றால்,நீ''இல்லை,இல்லை,மல்லிகைப்பூ தான் உனக்குப் பிடித்திருக்க வேண்டும்,''என்று சொல்வதில்லை.என் விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறாய்.உனக்கு மல்லிகைப்பூ தான் பிடிக்குமென்றால் அதுவும் சரிதான்.இதல் வாக்குவாதம் ஏது?சச்சரவு ஏது?நாமிருவரும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.புத்தியைத் தீட்டி உரசிக் கொள்ள வேண்டியதில்லை.எனக்கு ரோஜா பிடிக்குமென்பதாலேயே,உனக்கு மல்லிகை பிடிக்கும் என்பது பற்றி நான் எந்த வருத்தமும் பட வேண்டிய அவசியமில்லை.விரும்புவதும் விரும்பாததும் சொந்த விஷயங்கள்.ஒருவருக்கு கீதை பிடித்தால்,மற்றொருவருக்கு பைபிளும் இன்னொருவருக்கு குரானும் பிடித்துப் போகலாம்.சரிதான்.இதில் எந்தக் குற்றமோ குறையோ இல்லை.நமது விருப்பங்களை நமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.பிறரை வற்புறுத்தக்கூடாது.

பொழுது போக்கு

பொழுது போக்கு என்பது எப்படியோ உன்னை இழுத்து வைத்துக் கொண்டிருக்க ஒரு வழி தான்.எல்லாப் பொழுது போக்குகளும் உன்னிடமிருந்தே நீ தப்பித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள்தான்.எனக்கு என்னிடமே ஆனந்தம் பெற முடிகிறது.தனியே இருப்பதும் சும்மா இருப்பதும் பெரிய ஆனந்தம்.ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் பொழுது போக்கு என்ற முட்டாள்தனம் தேவையில்லை.பொழுதுபோக்கு என்பது வேலைக்கு வேறு பெயர்தானே.உண்மையான வேலையென்று ஏதும் இல்லாத போது,இப்படிப் போலி வேளைகளில் பொழுதைப் போக்குகிறாய்.ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பாய்.சம்பளம் இல்லை என்ற காரணத்தால் சீட்டாட்டமும் செஸ் விளையாட்டும் வேலை இல்லை என்றாகி விடுமா?பொழுது போக்குகளை விட்டு சந்தர்ப்பங்களைத்தேடிப் பார்.செய்வதற்கு ஏதும் இல்லாத போது உன்னோடே இருந்து பார்.அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார்.

மன பலவீனம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் குற்றவாளிகளைத் தண்டித்துக் கொண்டே தான் வந்திருக்கிறோம்.ஆனால் நமது தண்டனைகளால் அவர்கள் திருந்தினார்களா,மாறிவிட்டார்களா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
குற்றவாளிகளோ பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.சிறைச்சாலைகள் அதிகரிக்கின்றன.வழக்கு மன்றங்கள் பெருகி வருகின்றன.தவறுகளும் கூடிக் கொண்டே இருக்கின்றன.விளைவு?அதிகக் குற்றங்கள்!
பிரச்சினை என்ன?தவறு செய்ததற்குத்தான் தண்டிக்கப் பட்டோம் என்று குற்றவாளிகளும் உணரலாம்.ஆனால் மாட்டிக் கொண்டால் தான் தண்டிக்கப் படுகிறார்கள்.அதனால் அவனும் நியாயப் படுத்த ஆரம்பித்து விடுகிறான்.அடுத்த முறை இன்னும் தந்திரத்தோடு,புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.
இம்முறை அவன் சிக்கிக் கொண்டது தவறு செய்ததால் அல்ல.எச்சரிக்கையாக இல்லாததால்.சமுதாயம் அவனை விட புத்திசாலி என்று நிரூபித்து விட்டது.அடுத்த முறை அவன் அதை விடப் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக பிடிபடப்போவதில்லை.ஆகவே தண்டனை மூலம் அவன் கற்றுக் கொண்ட பாடம்,அடுத்த முறை மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான்.
மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தால் திருடாதிருப்பவர்,யாருமே இல்லாத போது வாய்ப்பு அமைந்தால் திருடத்தான் செய்வார்.பயம் தான் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் நல்லவராக இருப்பதெல்லாம் மன பலவீனத்தால் தான்.

தண்டிப்பு

உங்கள் குழந்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒன்றைச் செய்து விடுகிறது.இப்போது குழந்தை செய்தது சரியா தவறா ?எது சரி,எது தவறு என்று யாருக்குத் தெரியும்?ஆனால் அது அல்ல சிக்கல்.ஒருதந்தையாகவோ தாயாகவோ இருந்து சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.நீங்கள் எதை ஒப்புக் கொள்ளவில்லையோ,அவை தவறுகளாகிவிடுகின்றன.அது தவறாகவும் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒப்புக் கொள்வது தான் சரியாகி விடும்.அதனால் எல்லாமே உங்கள் ஒப்புதல்,நிராகரிப்புக்குள் அடங்கி விடுகிறது.
உங்கள் பார்வையில் ஒரு குழந்தை வழி தவறிப் போவதாகக் கருதினால்,நீங்கள் அதைத் தண்டிப்பீர்கள்.ஆழமான காரணம்,அது எதோ தவறு செய்து விட்டதால் அன்று,உங்களுக்கு கீழ்ப் படிய மறுத்ததுதான்.உங்களது அகங்காரம் காயப்பட்டு விடுவது தான் உண்மையான காரணம்.
குழந்தை உங்களிடம் முரண் படுகிறது.தன சுயத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது.உங்களிடம் முடியாது என்று சொல்லி விட்டதால்,அதிகாரம் கொண்ட தந்தை அதைக் கண்டிக்கிறார்.உங்கள் கர்வம் காயப்பட்டு விடுவதால்,தண்டித்தல் என்பது ஒரு வகையான பழி வாங்கல்தான்.
குழந்தை தவறு செய்தால் திருத்த வேண்டாமா? அதனால் தான் தண்டனை.தவறான வழியில் போனால் தண்டனை:உங்களைப் பின் பற்றினால் பரிசு!சரியான வாழ்வு என்பது இப்படித்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது.குழந்தையின் உரிமையாளர் நீங்கள் தான்.அது உங்களுக்கு அடிபணிய மறுத்தால்,சிரமப் பட வேண்டியது தான்!இப்படித்தான் நீங்கள் நியாயப் படுத்துவீர்கள்.
நியாயத்துக்கும் நியாயப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.நியாயப் படுத்துவது என்பது ஒரு தந்திரமான உத்தி.உண்மையான காரணத்தை இது மறைத்து விடுகிறது.பொய்யானதை வெளிப் படுத்துகிறது.ஆனால் எல்லாமே நியாயமாக நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எதிர்மறை

சுவர்க்கத்திற்குச் செல்லும் ஆனந்தம் எல்லாம்,நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்களின் துன்பங்களையும் வேதனையையும் பொறுத்து  அமைகின்றன.சுவர்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகம் என்ற ஒன்று இல்லைஎன்று தெரிந்தால்,அவர்களது மகிழ்ச்சி சட்டெனக் காணாமல் போய் விடும்.அவர்கள் மிகுந்த வேதனை அடைந்து விடுவார்கள்.நரகம் இல்லையென்றால் அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமே!
நரகம் இல்லையென்றால் எல்லாக் குற்றவாளிகளும்,பாவிகளும் சுவர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்?அப்புறம் மகான்கள் எங்கே போவது?
ஒழுக்க வாதிகளின் மகிழ்ச்சி ,பாவிகளின் துன்பங்களையே சார்ந்திருக்கிறது. செல்வரின் மகிழ்ச்சி,உண்மையாகவே ஏழைகளின் துன்பத்திலிருந்து தான் முளைக்கிறது.அது பணத்தால் பிறப்பதல்ல.
நல்லவனின் மகிழ்ச்சி,வெறுக்கப்படும் பாவிகளால் உண்டாவது.அது நன்மையால் மட்டும் உண்டானதல்ல.எல்லோரும் நல்லவராகி விட்டால் மகானின் மகிமையும் ஒளியும் மறைந்து போகும்.அவர் சட்டென முக்கியத்துவம் இழந்து விடுவார்.ஒரு வேளை அவர்,பழைய பாவிகளை அழைத்து,தங்கள் பழைய தொழிலைச் செய்யும்படி வேண்டலாம்.
எல்லா ஒழுக்கங்களின் முக்கியத்துவமும் அவற்றின் எதிர்மறையால் உண்டாகின்றன.ஆனால் அவை அவற்றைச்  சார்ந்துள்ளன.முழுமையை ஏற்பவர்,நாம் தீமை என்று சொல்வது தீமையின் மறு எல்லை என்பதையும்,  நன்மை என்பது தீமையின் மறு கோடி என்பதையும் உணர்ந்து கொள்வர்.

ஞாபக சக்தி

அலெக்சாண்டரிடம் இந்தியாவிலிருந்து வரும் போது,நான்கு வேதங்களையும் எடுத்து வருமாறு அவருடைய குரு கேட்டுக் கொண்டார்.யாரிடம் இந்த வேதங்கள் உள்ளன என்று விசாரித்ததில் ஒரு பிராமண குடும்பத்தில் இருப்பதாகவும் அதை அவர்கள் நிச்சயம் தர மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.அலெக்சாண்டர் படையுடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டு  நான்கு வேதங்களையும் கொடுக்காவிடில் வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டினார்.குடும்பத் தலைவன்,மறுநாள் காலை தருவதாக வாக்களித்தான்.இரவு குறிப்பிட்ட பிரார்த்தனை செய்த பின் தான் தர முடியும் என்று கூற அவர்களால் தப்பிச் செல்ல முடியாது என்ற நிலையில் அலெக்சாண்டர் அதற்கு ஒத்துக் கொண்டார்.மறுநாள் காலை அலெக்சாண்டர் வீட்டினுள் சென்று பார்த்த போது,நான்கு வேதங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.'நீ என்ன செய்கிறாய்?'என்று அவர் வினவ,குடும்பத்தலைவன் சொன்னார்,''இந்த நான்கு வேதங்களும் நெருப்புக்கு இரையாகி விட்டன.இங்கே இருக்கும் நால்வரும் என்னுடைய மகன்கள்.இரவு முழுவதும் இந்த வேதப் புத்தகங்களை நான் படிக்க,அதை இவர்கள் கவனமாகக் கேட்டு  ஞாபகத்தில் வைத்துள்ளனர்.நீங்கள் இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.''கவனித்துக் கேட்டது அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள  இயலுமா?அலெக்சாண்டரால் நம்ப முடியவில்லை.வேறு சில பிராமணர்களை வரவழைத்து இவர்கள் ஞாபகத்தில்வைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பதனை சோதித்துப் பார்த்தார்.அவர்கள் வேதத்தில் உள்ளதை எழுத்துப் பிசகாமல் திரும்பச் சொன்னார்கள்.எப்படிஅவர்களால் அவ்வளவையும் ஞாபகத்தில்  வைத்துக் கொள்ள முடிந்தது?இதன் ரகசியம் இது தான்;உங்கள் ஞாபக சக்தியில் 90% பயனற்றவைகளாக இருக்கின்றன.நீங்கள் குப்பைகளையெல்லாம் மறந்து போகக் கூடிய தகுதி உள்ளவர்களாக இருந்தால்,பிறகு எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி வந்து விடும்.பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.அதனால் அவர்களால் நன்கு வாதங்களை மட்டுமல்ல,அதற்கு மேலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது.
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம்.சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை,குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள்.உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.

அஞ்ஞானம்

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும்,உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது.யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால்,உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது.இது எதனால்?மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது.''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல:நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது.யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது,''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது.நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!
ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை  எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள்.'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை.உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள்.அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள்.யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.
இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள்.செய்தி உண்மையானது என்றாலும்,ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள்.உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர  எல்லோரும் பாவிகள்தான்.யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு  அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார்.அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும்,என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள்.இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள்.உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.

யார் குரு?

எப்போதும் பிறர் மூலமாகவே நீங்கள் மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள். அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட உங்களைக் கோபம் அடையச் செய்யும்.அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பார்வையே உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைப் பொறுத்தவரை ஒரு குருதான்.இப்படி இந்த குருக்கள் உங்களைத் தங்கள் பக்கம் இழுக்கும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?நீங்களே உங்களுக்கு குருவாக ஆகுங்கள்.அப்போது மற்றவர்கள் எல்லாம் உங்களுக்குக் கீழ் அடிமையைப்போல வேலை செய்வார்கள்.

பொறுப்பு

நீங்கள் எப்போது உங்கள் பொறுப்பை பிறரிடம் கொடுக்கிறீர்களோ,அப்போதே சுதந்திரத்தை இழக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.எப்போது நீங்கள் இருப்பவரிடமோ அல்லது இறந்தவரிடமோ சரணாகதி அடைகிறீர்களோ,அப்போதே உங்களை அழித்துக் கொள்கிறீர்கள்.அது மாத்திரமல்ல.உங்கள் தனித்தன்மையைப்  பொறுத்தவரை,நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்.ஆனால் பல பேர்,தங்களுடைய பொறுப்பிலிருந்து  விடுதலை அடையும்போது மிகவும் திருப்தி கொள்கிறார்கள்.ஏதோ சுமை குறைந்ததுபோல உணருகிறார்கள்.சிலபேர் இந்தப் பொறுப்பை தாங்களே மனமுவந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அவரைத்தான் நீங்கள் உங்களைக் காப்பாற்ற வந்தவர் என்று கருதிக் கொள்கிறீர்கள்.நீங்கள் அவரை நம்பி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள்.இந்த உலகில் ஆராயாமல் நம்புவதைக் காட்டிலும் சுலபமான வேலை எதுவும் இல்லை.ஏனென்றால்,இந்த செயலுக்காக எந்த சிரமும் பட வேண்டியதில்லை.

சிறு மணல்

கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
**********
வெற்றி என்பதில் எந்தத்  தகுதியும் கிடையாது.உண்மையாகச் சொன்னால்,அது மிகவும் அருவருப்பானது.ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
**********
ஒருவர் உடல் துன்பத்தில் இருக்கும்போது,நீங்கள் எதைப் போதித்தாலும்  அது அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்.
**********
கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
**********
சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது.சரியான மனிதனுக்கு அல்ல. ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால்,அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.
**********
முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை  விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.
**********

அன்பு எது?

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே  வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும் போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரைக்  கொன்று கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
நேற்றுயாராவதுஉங்களிடம்இனிமையாகநடந்துகொண்டிருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது  அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள். அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது.உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை.காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒரு குயில் அழைக்கிறது.காரணம் இல்லாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பு அன்பையே உருவாக்கும்.