புரிந்துகொள்ள வேண்டும்.

         பிறர் வாயிலிருந்து வரும் சொற்களைக் காதால் கேட்டால் மட்டும் போதாது.உள் பொருளையும் உணர்ச்சிகளையும் உற்று நோக்க வேண்டும்.புத்தி கூர்மையோடு புரிந்து கொள்ள வேண்டும்.பல்வேறு காரணங்களுக்காக,உண்மையை  மறைக்கும் போர்வையாக வெளிச் சொற்கள் இருக்கின்றன.இந்தச் சொற்களுக்கு அப்படியே பொருள் கொண்டால் வீண் கோபமும் வேண்டாத மன வருத்தமுமே மிஞ்சும்.சொற்கள் என்னும் முகமூடி பல வகையில் உள்ளது.

**வழக்கமாகக் கோபப்படாத ஒரு சாதாரண விசயத்திற்காக ஒருவர் திடீரெனக் கோபப்பட்டால் வேறு ஒரு கோபம் திசை திரும்பியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.


**நம்மிடம் சொல்லப்பட அவசியம் இல்லாத ஒரு விஷயத்தை ஒருவர் நம்மிடம் சற்று உரக்கப் பேசினால் அவர் அந்தத் தகவலை பக்கத்திலே உள்ள ஒருவரிடம் நேரிடையாய்ச் சொல்லாது நம் மூலம் சாடையாய்ச் சொல்கிறார் என்று பொருள்.


**சிலர் தம் ஆற்றாமையைக் கொட்டித் தீர்ப்பதற்காக பொரிந்து தள்ளுவார்கள்.அது நம்மைத்  தாக்குவதாக நினைத்துப் பதில் சொல்லவோ அவருக்கு சமாதானமான ஒரு காரணத்தை சொல்லவோ அவசியம் இல்லை.பேசியவர் தன சுமை இறங்கியதும் சாதாரணமாகிவிடுவார்.


**ஒரு சிலருக்கு எதையும்,ஏன்,பாராட்டையும் கூடக் கோபத்தின் வாயிலாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும்.அவர்களின் கடுமைக்குப்பின் ஆழமான பாராட்டுதலும் அன்பும் ஒளிந்திருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


**நாம் ஒரு சில அனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது  சிலர் குறுக்கிட்டு அதே போன்ற தன அனுபவத்தை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.இதை அவருடைய அகங்கார மாகக் கருதாது தனக்கும் அதே மாதிரி அனுபவம் இருக்கிறது என்பதைத் தெரிவித்து நம் நட்பைப் பலப்படுத்த விரும்புகிறார்  என்று கருத வேண்டும்..ஆனால் இதற்கு  பொறுமை வேண்டும்.
சொற்களைக் கேளுங்கள்.
பொருள்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு அனைவரிடமும் மரியாதை கிடைக்கும்.