கடவுள் நேரில் வந்தா காப்பார்?; ஒரு சுவாரஸ்யமான பதிவு!!!



ஒரு ஊரில் மழைபெய்து கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லோரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி உயிர் பிழைக்கும் பொருட்டு ஊரைவிட்டுச் சென்றனர்.  ஒருவன் மட்டும் தெளிவாகச் சொன்னான். "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது, கடவுள் என்னைக் கண்டிப்பாக காப்பாற்றுவார், ஆகையால் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறி ஊரைவிட்டு வெளியே கிளம்ப மறுத்தான்.

ஊரெங்கும் பண்பலை வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியே வெள்ள  எச்சரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மக்கள் அச்சப்பட்டு கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறினர். அந்த ஒருவன் மட்டும் ஊரைவிட்டு வெளியே வர மறுத்தான். மழை தொடர்ந்து பெய்தது. ஒரு  ஜீப் வண்டியில் மீட்புக்குழுவினர் வந்து அவனைப் பார்த்து, ‘வண்டியில் ஏறிக்கொள்  உயிரைக் காத்துக்கொள்என்றனர். இவனோ "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்", என்றான். 

அடாது மழை விடாது பெய்ததுஊரில் இவன் மட்டும் தான் இருந்தான். இப்போது இவனது மார்பு அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மீட்புக்குழுவினர் படகில் வந்தனர். இவனருகில் வந்து 'தயவு செய்து படகில் ஏறிக்கொள், உயிரைக் காத்துக்கொள் என்றனர் இவனோ "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்" என்றான். இப்பொழுது வெள்ளநீர் இவனது தோள்பட்டையை தாண்டிக் கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ‘எலிகாப்டர்' ஒன்று இவனை வட்டமிட்டு  செய்தி கூறியது. 'தயவு செய்து எலிகாப்டரில் ஏறிக்கொள்.., உயிரைக்காத்துக்கொள் என்று வேண்டிக்கொண்டது. இவனோ மீண்டும் "கடவுள் காப்பாற்றுவார்.., நீங்கள் போகலாம்", என்றான். இடி மின்னலுடன் மழை பிரளயமாக உருவெடுத்தது. இவன் நீரில் முழுவதும் மூழ்கி இறந்தான், விண்ணுலகம் சென்று கடவுளை கண்ட அவன் அவருடன் தர்க்கம் செய்தான்.

இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எல்லோரும் சுயநலமாக கடவுளாகிய உன்னைப் பற்றி கருதாமல் வேறு ஊருக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். நான் ஒருவன் மட்டும் தான் உன்னை நினைத்து உருகி வேறிடம் செல்லாமல் ‘கடவுள் காப்பாற்றுவார் என்ற ஒரே எண்ணத்தில் தீவிரமாக இருந்தேன். ஆனால் நீயோ என்னைக்  கைவிட்டு விட்டாயே இது முறையா?" என்றான். 

கடவுள் சொன்னார் ‘ஜீப், படகு, எலிகாப்டர் இவற்றை அனுப்பிவைத்து உன்னைக் காப்பாற்ற முயன்றது யார் என்று நினைத்தாய். நீ என் மீது  வெறும் நம்பிக்கை மட்டும்தான் வைத்து இருந்தாய், உயிர் பிழைப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் நானோ உனக்காக முதலில் ஒரு ஜீப்பை அனுப்பினேன் நீ வர மறுத்து விட்டாய், சோர்ந்துவிடவில்லை நான், நீ.., என் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மெச்சி உனக்காக ஒரு படகை மீண்டும் நான் அனுப்பி வைத்தேன் அதிலேயும் நீ ஏறிவர மறுத்துவிட்டாய். இறுதிவினாடிகளில் கூட உன்னை எப்படியாவது காக்கவேண்டும் என்ற என் தீவிர எண்ணத்தால் ஒரு எலிகாப்டரை அனுப்பி முயற்ச்சித்தேன் உன் அறியாமையால் அதிலும் ஏறிவர நீ மறுத்து உயிர் நீத்ததாய்.

உன் பொருட்டு நான் இத்தனை முயற்சித்தும், நீ ஒரு சிறு  முயற்சிகூட எடுக்காமலிருந்து உயிர் நீத்ததாய் இதில் எனது தவறு எங்கே உள்ளதென்று நீ கூறு என்றார். புவியில் கோடான கோடி ஜீவராசிகள் உண்டு, ஒவ்வொறுவருக்கும் நானேதான் நேரில் வந்து உதவ வேண்டுமென்றால் உங்களுக்கெல்லாம் உணர்ச்சிகள் எதற்கு?, சிந்திக்கும் மூளை எதற்கு? என்றார்.

உண்மைதானே! நாம்தான் நம்மை காத்துக்கொள்ள வேண்டுமே தவிர கடவுள் தான் வந்து காக்க வேண்டும் என்று நினைப்பது, ஒருவன் நம்மை வெட்டுக்கத்தியால் வெட்ட வரும் போது கடவுள் நம்மை காப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை காட்டிக்கொண்டிருப்பதற்க்கு சமமானது.