இது கனவுகள் பற்றிய இன்று ஒரு தகவலின் இரண்டாம் பாகம். இதை வாசிக்க துவங்குவதுக்கு முன் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்
மெண்டெல்ஃப் எனும் விஞ்ஞானி புகழ்பெற்ற “பீரியாடிக் டேபிள்”ஐ கண்டுபிடித்தவர். இவர் இந்த அட்டவணையின் முக்கியக் கூறுகளை கனவில் கண்டுபிடித்ததாகவும், அது சரியாக இருந்ததாகவும் ரஷ்ய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ் ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார்.
சில எழுத்தாளர்கள் தங்களுடைய கதை கனவில் கிடைப்பதாகவும், பல கவிஞர்கள் தங்கள் கவிதைக்கான வரிகள் கனவில் கேட்பதாகவும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களில் குறிப்பிட்டிருப்பது சுவாரஸ்யமானது.
நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றியோ,புதிய ஏதேனும் இடங்களைப் பற்றியோ வருகின்ற கனவுகள் ஒருவேளை நம்முடைய எதிர்காலத்தைக் குறிக்கும் கனவுகளாக அமையலாம் என்பது சிலருடைய கருத்து.
கனவுகள் நம் உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கனவுகளின் போது நமது உடல் உழைப்பு ஏதும் செலவழியாமலேயே இருக்கிறது. எனினும் கடினமான உழைப்பைச் செலுத்துவது போன்ற கனவு கண்டால் உடல் சோர்வடைந்திருப்பதாக உணர முடியும் என்பது வியப்பு.
கனவுகள் சிலவேளைகளில் நம்முடைய வாழ்வில் நடக்கும் செயல்களின் தொடர்ச்சியான தகவல்களைத் தாங்கி வருவதுண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவது போல கனவு காண்பது வெகு சாதாரணம்.
பெரும்பாலான கனவுகளுக்கு எதிர்மறை எண்ணங்களே ஆதாரமாய் இருப்பதாகவும், ஆண்களுடைய கனவுகளில் அதிகம் ஆண்களே வருவதாகவும், ஆண்களுடைய கனவுகள் மிகவும் ஆக்ரோஷமானவையாய் இருப்பதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
பாலியல் சார்ந்த கனவுகள் பத்து விழுக்காடு வருகின்றன என்றும், ஒரே கனவு சுமார் 65% விழுக்காடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. யாரோ துரத்துவதாகவும், ( பெரும்பாலும் நம்மால் ஓட முடியாது என்பது வேறு விஷயம் ), மிகவும் தாமதமாக செல்வதாகவும் ( தேர்வு முடிந்தபின் பேப்பர் பேனா இல்லாமல் தேர்வு எழுதச் செல்லும் கனவுகள் போல ), எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும் ( பாதியிலேயே இது கனவு தான் அப்படின்னு தோனினா தப்பிச்சோம் ) பாலியல் சார்ந்த செயல்களும், பறப்பது போலவும், தேர்வில் தோல்வியடைவது போலவும் எல்லாம் கனவுகள் காண்பது உலக அளவில் நடக்கின்றதாம்.
வீழ்வது போல கனவு கண்டால் பொருளாதாரம், நட்பு, பதவி என ஏதோ ஒரு இடத்தில் சறுக்கல் நடக்கலாம். யாரோ துரத்துவது போல காணும் கனவுகள் நாம் ஏதோ செய்ய மறந்து போன, அல்லது தவிர்த்த கடமைகளின் துரத்தல். பல் விழுவது போல கனவு கண்டால் அது பல் சம்பந்தப்பட்டதல்ல, சொல் சம்பந்தப்பட்டது. நீங்கள் பேசும் பேச்சைக் கவனித்துக் கொள்ளுங்கள். திரும்பவும் பள்ளிக்கூடம் செல்வது போலக் கனவு கண்டால் அதிக பணி அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுவது போல கனவு கண்டால் சம்பந்தப்பட்ட நபர் வேலையிலோ,விளையாட்டிலோ, வேறு தனிப்பட்ட ஏதோ பணிகளில் காட்டும் அக்கறையை வாழ்க்கைத் துணை மீது காட்டவில்லை என்று அர்த்தம் என்றெல்லாம் கனவுகளின் பலன்களைப் பட்டியலிட்டு சுவாரஸ்யத் தகவல்களைத் தருகிறார்கள் பலர்.
காலையில் விழித்ததும் அசையாமல் அதே நிலையில் படுத்திருந்து சிந்தித்தால் நீங்கள் கண்ட கனவுகள் உங்களுக்கு நினைவில் இருக்குமாம் ! அந்த நேரத்தில் கனவுகளை நினைவுபடுத்தி ஒரு காகிதத்தில் ( படுத்தபடியே ) எழுதி வைத்துக் கொள்ளவேண்டுமாம். எல்லாம் தொன்னூறு வினாடிகளுக்கும் செய்து முடிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு கனவு நினைவுக்கு வராதாம்.
ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக கனவுகள் வருகின்றன. அதிக எடையுள்ளவர்கள், மூச்சு சரியாக செல்லாதபடி நோயுற்றிருப்பவர்கள், அதிக மது அருந்தும் பழக்கமுடையவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், இரவு வேலை பார்ப்பவர்கள், போன்றவர்கள் சரியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் கவலைப்படுவார்கள் என்கின்றன மருத்துவ அறிக்கைகள்.
நல்ல ஆழ்ந்த தூக்கம் பல கனவுகளைத் தவிர்த்து விடும். கனவுகளை விரும்பிப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். கனவுகளைப் பற்றிப் பயப்படுபவர்கள் நல்ல தூக்கத்துக்கான வழிமுறைகளை நாடுவது நல்லது. நல்ல தூக்கத்துக்கு சில வழிமுறைகள்.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்தலும்,குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும்புதலும் வேண்டும்.தூங்கும் முன் நல்ல இசை கேட்டல், நல்ல நூல் படித்தல் , குளித்தல் என ஏதோ ஒரு மனதை இலகுவாக்கும் செயலில் ஈடுபடுதல் நலம்.
நல்ல அமைதியான இருட்டான தொந்தரவுகளற்ற தூங்கிமிடத்தை தயாராக்கிக் கொள்ளுங்கள். படுக்கை தலையணை எல்லாம் நல்லதாக இருக்கட்டும். மன அழுத்தத்தைத் துரத்திவிடுங்கள்.தூக்கத்துக்கு பயன்பட வேண்டிய படுக்கை அறையில் பணி சம்பந்தமான எந்தப் பொருளும் இருக்க வேண்டாம்.தூங்குவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பே உணவு உண்டு முடித்து விடுங்கள். காபி,புகைத்தல், மதுப்பழக்கம் இவற்றுக்கு பெரிய கும்பிடு போட்டு விடுங்கள்.தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தூங்கப் போவதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்பே அதை முடித்துக் கொள்ளுங்கள். இவற்றைக் கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வாய்க்கும்,தேவையற்ற கனவுகளிலிருந்து தப்பித்தலும் வாய்க்கும்.
கனவுகள் வண்ணத்தில் வருமா, கருப்பு வெள்ளையில் வருமா என்றும் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் பல்வேறு பட்ட முடிவுகள் வந்திருந்தாலும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் 12 விழுக்காடு மக்கள் தங்கள் கனவுகளை கருப்பு வெள்ளையில் மட்டுமே காண்கிறார்கள் என்னும் கருத்தோரு ஒத்துப் போகிறார்கள்.
மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட கனவுகள் காண்கின்றன என்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் விலங்குகள் தான் மனிதர்களை விட சிக்கலான கனவுகளைக் காண்கின்றனவாம்.
கனவு தானாய் வருகிறது என்றால், பகல் கனவை நாம் காண்கிறோம். அடைய விரும்பும் இலட்சியங்களை அடைந்தது போலவும், அதற்கான அங்கீகாரங்கள் கிடைப்பது போலவும், நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துவது போலவும்,நம் இயலாமையின் கோடிட்ட இடங்களை நிரப்புவது போலவும் என பல வகைகளில் முகம் காட்டுகின்றன பகல் கனவுகள்.
சிலவேளைகளில் நம்முடைய கனவுகள் நிகழும் நேரம் நம்முடைய சுற்றுப் புறத்தில் கேட்கும் தீயணைப்பு வண்டி போன்ற சத்தங்கள் கனவுகளோடு இணைந்து அது சம்பந்தமான கனவுகளையும் தந்து விடுகின்றன. அருகில் எங்கேனும் தீ விபத்து நடந்தால் பக்கத்து வீடுகளிலுள்ள சிலர் தீ விபத்து நடப்பது போல கனவு கண்டிருப்பார்கள்,அதன் காரணம் இது தான்.
நம்முடைய கனவுகளை கவனமாக ஆராய்ந்தால் நமது மனதில் புதைந்து கிடக்கும் தெரியாத ஆசைகளும், நமது குணாதிசயங்களும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவை நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் எனவும் கனவுகளுக்கான பலன் கூறுபவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
கருச்சிதைவு ஏற்படுவது போல கனவு கண்டால் உங்கள் வளர்ச்சியை நீங்களே தடுக்கிறீர்கள் என்று அர்த்தமாம் !
யானையைக் கனவில் கண்டால் வளம் கொழிக்கும் என்றும்,பூனையைக் கனவில் கண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் வரும் என்றும், பாம்புகளைக் கனவில் கண்டால் பாலியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும், நாயைக் கனவு காண்பது நாம் மறந்து போன எதையோ நினைவுபடுத்துவதாக இருக்கலாம் என்றும் கனவுகளை வைத்து புத்தகம் எழுதுபவர்கள் எழுதித் தள்ளுகிறார்கள்.
மருத்துவம் கனவை தூக்கத்தில் நிகழும் நரம்புகளின் செயல்பாடாகப் பார்க்கிறது. உளவியல் கனவை ஆழ்மன சிந்தனைகளின் பிரதிபலிப்பாய் பார்க்கிறது. ஆன்மீகம் கடவுளின் முன்னெச்சரிக்கைகள் என்கிறது. எப்படியோ கனவுகள் மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன,மனிதன் கனவுகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான்.
|