இன்று ஒரு தகவல் - 40


வணக்கம் நண்பர்களே...
 
எஞ்சின் இயக்கும் விமானத்தைச் சோதிப்பதற்கு முன், 1900 முதல் 1902 வரை மூன்று ஆண்டுகள், கிட்டி ஹாக், வட கரொலினாவில் [Kitty Hawk, North Carolina] பொறி இல்லாத மூன்று ஊர்திகளைச் [Gliders] காற்று எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் 'கில் டெவில் ஹில் ' [Kill Devil Hill] என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தார்கள்! டேடன் ஓஹையோவில் முதன் முதல் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றை நிறுவி, 200 விதமான இறக்கைகளைப் பல மாதங்கள் இருவரும் ஆராய்ச்சி செய்து, கடேசியில் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். மூன்றாவது படைக்கப் பட்ட ஊர்திதான் முழுக் கட்டுப்பாடு உடையது. மேலும் கீழும் எழுச்சி [Lift] உண்டாக்கும் 'தூக்கி ' [Elevator] ஊர்தியின் முன்புறமும், இடது-வலது பக்கம் திரும்ப 'திருப்பி ' [Rudder] பின்புறமும், ஊர்தி உருள்வதற்கு 'இறக்கைச் சுழற்றி ' [Wing Wrapper] இரு புறமும் அதற்கு அமைக்கப்பட்டிருந்தன! 


இரண்டு சிரமமான பிரச்சனைகள்: திறம் மிக்க, பளுவற்ற அப்போது இல்லாத 'சுழலாடிகள் ' [Propellers] முதலாவது, டிசைன் செய்யப் பட்டு அமைக்கப் படவேண்டும். இரண்டாவது தகுதியான எடை சிறுத்த, எஞ்சின் ஒன்று தயாரிக்கப் படவேண்டும். அந்தக் காலத்தில் படைக்கப் பட்ட எஞ்சின்கள் யாவும் மிகக் கனமாக விமானத்தில் இணைக்கத் தகுதி யற்றவையாய் இருந்தன!

1903
இல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட 'கிட்டி ஹாக் ' [Kitty Hawk] என்னும் Flyer I டிசம்பர் 17 ஆம் தேதி பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது! விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு மற்றும் இரண்டு ஆண்டுகள் செம்மைப்படுத்தப் பட்டு, சிறப்பிக்கப்பட்டு, 1905 இல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது; சிரமம் இன்றி எட்டாம் எண்போல் வட்டமிட்டது! பக்க வாட்டில் திரும்பியது! 1908 இல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டியிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள். பயணம் தடைப்பட்டதற்குப் பெரும் பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான்! எஞ்சினும் சிறியது! பெட்ரோல் கலனும் சிறியது! 


1909 இல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது! 

1912 மே மாதம் 30 ஆம் தேதி வில்பர் டைஃபாய்ட் காய்ச்சலில் உயிர் துறந்து, ஆர்வில் தனித்து விடப்பட்டார். அடுத்து 35 ஆண்டுகள் விமானச் செம்மைப் பாட்டில் ஆழ்ந்து பங்கெடுத்து ஆர்வில் 1948 ஜனவரி 30 ஆம் தேதி காலமானார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரிகள். 

பூமியில் சாதாரண சைக்கிள் மெக்கானிக்களாக ஆரம்பித்து, வானில் மிரக்கிள் மெக்கானிக்களாக மேலுயர்ந்த அமெரிக்காவின் அபூர்வ சகோதரர்களின் அபாரத் திறமையை என்ன வென்று வியப்பது ? 1903 இல் அபூர்வ சகோதரர்கள் 12 வினாடி காலம் 120 அடி பயணம் செய்து பறப்பியல் அடிப்படையாகி, அண்ட வெளியில் நீல் ஆர்ம்ஸ்டாங் ஏவுகணைச் சிமிழில் 250,000 மைல் பறந்து, வெண்ணிலவில் முதன் முதல் 1969 இல் கால் வைக்க உதவியதைச், சரித்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறை சாற்றிக் கொண்டே இருக்கும்!


இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது!  விண்வெளிப் பயணத்துக்கு விதையிட்ட சரித்திரத் தீரர்கள் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்களின் நினைவாக கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் 1932 ஆம் ஆண்டு 60 அடி உயரமுள்ள கற்கோபுரம் ஒன்று 90 அடி மலை உச்சியில் கம்பீரமாக நிறுத்தப் பட்டுள்ளது.