நிலவானால் முகிலாவேன் (கவிதை)

பொன்னென்று எண்ணினேன் பூவென்றுபாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்ல பூவல்லப் பழமல்லப் பாவையும்
பார்த்ததில் இவையொன்றில்லை
என்னென்று சொல்லுவேன் ஏழைஎன்மனதினில்
இச்சையை ஊற்றிவைத்தாள்

பொன்னல்ல பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிதொட்ட மிவளென்று
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைகொள்ள ஆயிரம்
கனியுண்டு என்றறிந்தேன்

செந்நாவி லூறிய தேனுண்ணு என்றெனை
தினம்தின மூட்டிவிட்டாள்
எந்நாணமின்றியே இரவிலே மழலையாய்
எனைக் காணத் துணிவூட்டினாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சங்கீதம் `சரிகமபத` வில்லை
தாகத்தின் ஓசை என்றாள்
பொன்மேனி தொட்டதும் போதாதுஎன்றுமே
பொல்லாத ராகமிமிட்டாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்மேனி ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென் றழுது நின்றாள்

கண்ணாடி பார்த்திடத் தன்னெழில் கண்டுமே
காதலில் வீழ்வாளென்றே
பெண்ணவள் கண்களைப் பின்னாலே நின்றுமே
பேசாது பொத்தி நிற்பேன்
எண்ணாது ஓர்நாளில் கண்ணாடி முன்நின்ற
ஏந்திழை எழில் கண்டுமே
வெண்ணிலா நேர்வந்து வெட்கத்தை விட்டதே!
விரைந்துநான் முகிலாகினேன்