வியக்கவைக்கும் தகவல்கள் - 5




பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பு பனி வருவதற்கு முன்பு பூமி முழுவதும் மிகவும் வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை இருந்தது. இப்பொழுது அடர்த்தியான காடுகள் இருக்கும் இடங்களில் பீச் மரங்கள் இருந்தன. அங்கே பறவைகள் பாடின; சில்வண்டுகள் சத்தமிட்டன. அங்கே ஒரு விசித்திரமான மிருகம் இருந்தது. அது குதிரையும் அல்ல, ஒட்டகச்சிவிங்கியும் அல்ல. இந்த மிருகத்திற்குக் குதிரையின் கழுத்து இருந்தது. தலையில் கொம்புகள் இருந்தன. கழுதைக்கு இருப்பதைப்போன்ற காதுகளும், வரிக்குதிரையைப்போன்ற கால்களும் இருந்தன.

இதன் பெயர் "பாலியோடிராகஸ்'. இது இப்போதுள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு மூதாதையாகும். ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாலியோடிராகஸ் ஐரோப்பிய ஸ்டெப்பி நிலங்களில் வசித்தது.

யானை இனத்தைச் சேர்ந்த "டினோதேரியம்(Deinotherium)என்ற விலங்கும் அப்போது இருந்தது. டினோதேரியம் என்றால் "ஆச்சரியமான விலங்கு' என்று அர்த்தம். ஆனால், உண்மையில் இது அவ்வளவு ஆச்சரியமானது அல்ல. இது எல்லா யானைகளையும்போன்றேதான் இருக்கும். மற்ற யானைகளைவிடப் பெரிய உருவமாக இருக்கும். தந்தங்கள் வால்ரசைப் போலக் கீழ் நோக்கி வளைந்திருக்கும்.

அந்தக் காலத்து மிருகங்கள் "கத்திப்பல் பூனையைக் கண்டு பயந்தன. அது தன்னுடைய இரையைத் தரையில் மிதித்து அழுத்திக்கொண்டிருக்கிறது. அதன் கண்கள் நெருப்பைப்போலப் பிரகாசிக்கின்றன. அதன் உரோமம் குத்திட்டு நிற்கிறது. சிறு கண்கள் தலையோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அதன் பற்கள் வெளியே தெரிகின்றன. அந்தப் பற்கள் ஈவிரக்கம் அற்றவை.

படத்தில் இந்தப் பிராணி அமைதியாகத் தன்னுடைய இறைச்சித் துண்டைக் கடித்துக்கொண்டிருக்கிறது. இதன் தாடையில் பைபோன்ற அமைப்பு உண்டு. இந்தப் பையில் அதன் பற்கள் மறைந்திருக்கும். கத்திப்பல் பூனைக்கு இந்தப் பை அவசியம். இல்லையென்றால் அடர்த்தியான புற்களில் பட்டு அதன் பற்கள் கூர்மையிழந்துவிடும்.