மத போதகர் ஒருவர் மக்கள் மத வழியில் வாழ சிறப்பான போதனைகள் செய்து வந்தார்.ஒரு நாள் மிக அதிகமாகச் சாப்பிடுவதன் விளைவுகளை வைத்து ஒரு போதனை நடத்தினார்.அவர் சொன்னார்,''மிகஅதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமன்களுக்கு என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?நரகத்தில் பெரிய கண்ணாடியிலான தூண் ஒன்று இருக்கிறது.அங்குள்ள பிசாசுகள் அத்தூணை பழுக்கச் சூடேற்றி வைத்திருப்பார்கள்.''இதைச் சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார்.சாப்பாட்டை விரும்புபவர்கள் முகத்தில் பீதி ஏற்பட்டதைக் கவனித்த அவர் திருப்தியுடன் தொடர்ந்தார்,''அந்த கண்ணாடித் தூணில் ஒரு சிறு துளை இருக்கும்.சாப்பாட்டு ராமன்களை அந்த துளையின் ஒரு பக்கம் திணித்து மறு பக்கம் இழுப்பார்கள்.எவ்வளவு வேதனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.''பேச்சை முடித்து விட்டு தங்குமிடத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பணக்காரரைக் கண்டார்.பணக்காரர்,''நான் உங்களுக்கு இன்று ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.ஆனால் இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை உணர்ந்தேன்.எனவே அந்த விருந்தை .......''என்று பேசி முடிக்குமுன்னே,போதகர் சொன்னார்,''வேறொன்றும் பேச வேண்டாம்.நேரே உங்கள் வீட்டுக்குப்போய் சாப்பிடுவோம்.''போதகர் பணக்காரர் வீட்டில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தார்.சாப்பிட்டு முடித்தபின் பணக்காரர் மெதுவாக,''ஐயா,நீங்கள் இன்று சாப்பாட்டு ராமன்களின் கதி பற்றி விவரமாகப் பேசினீர்களே.....''என்று இழுத்தார்.போதகர் வாயைத் துடைத்து விட்டு ஒரு பெரிய ஏப்பம் விட்டு விட்டுச் சொன்னார்,''ஆமாம்.நான் சொன்னது மாதிரி தான் நடக்கும்.ஆனால் பயப்பட வேண்டாம்.கோடிக்கணக்கான சாப்பாட்டு ராமன்களை அந்தத் துளை வழியாக இழுத்து இழுத்து,இப்போது ஒரு யானை கூட அதன் ஓரங்களைத் தொடாமல் செல்லும் அளவுக்கு அந்த துளை பெரிதாகிவிட்டது.''