நம்மில் பலருக்கு பயந்த சுபாவம் இருக்கிறது.நமக்கு என்று சில உரிமைகள்,உணர்வுகள்,விருப்பங்கள்,தேவைகள் இருக்கும்.ஆனால் அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.அப்படியே சொன்னாலும் குற்ற உணர்வுடன் சொல்கிறோம்.இவ்வாறு நாம் நமது உணர்வுகளை மறைத்து அனுசரித்தே போகிறோம்.நமக்குப் பிடிக்காதவற்றை நாம் பிறருக்காக,அவர்களுடைய வற்புறுத்தலுக்காக செய்து கொண்டிருக்கிறோம். இதில் கௌரவம் இல்லை.இது ஒரு துயரமான நிலை.பிறர் முகத்தாட்சணியம் பார்த்தே நாம் துயரப்படுகிறோம்.நம் கருத்தை வெளியிட்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்களோ என்று நாம் அஞ்சுகிறோம்.பல சமயங்களில் இது உண்மைதான்.அதற்காக நாம் நமது நியாய உணர்வுகளை விட்டுவிட முடியுமா?அவற்றை நாம் மூடி மறைக்க வேண்டுமா?நம்மை நாமே காட்டிக் கொள்ள அஞ்சத் தேவையில்லை. ஆனால் ஒன்று,நம்மை நாம் வெளிப்படுத்தும்போது மூர்க்கத்தனம் தேவையில்லை.அன்பாகவும் அமைதியாகவும் நாம் அதைச் செய்ய முடியும். அதே நேரத்தில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.தன்னுறுதி இல்லாதவர்களால் தெளிவாகச் சிந்தித்து செயல் பட முடியாது.