நாம் யாருடனும் நேரிடையாக உறவை அமைத்துக் கொள்வதில்லை.கடந்த காலங்களில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நாம் பழகி வரும் அனைவரைப்பற்றியும் தனித்தனியாக பிம்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம்.அந்த பிம்பங்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாதபடி தடுத்து விடுகின்றன.இதன் காரணமாக மனிதன் வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருவது மட்டுமல்லாது,போட்டியும்,பொறாமையும் நிறைந்த உலகச் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறான்.நாம் வாழ்ந்த சூழ்நிலை,நாம் தேடிக்கொண்ட அறிவு,நமக்குக் கிடைத்த அனுபவங்கள் போன்றவை ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன.ஒருவன் உங்களைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினால் அதை என்றும் நீங்கள் மறப்பதில்லை.அவனுடைய அந்தச் செய்கை ,''இவன் ஆணவம் நிறைந்தவன்,இப்படிப்பட்டவன் உறவு நமக்குத் தேவையில்லை''என்று அவனைப்பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.அவனைச் சந்திக்கும் போதெல்லாம் அந்த பிம்பம் உங்களுக்கும் அவனுக்கும் குறுக்கே நின்று அவனிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள உங்களைத் தடுத்து விடுகிறது. ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி கூட நேர்மையாக உறவு வைத்துக் கொள்ளாது பிம்பங்கள் மூலமாகவே உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் மன வாழ்வை வேதனை நிறைந்ததாக மாற்றி விடுகின்றனர்.மதக் கலவரங்கள் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் இம்மாதிரி பிம்பங்களினாலேயே ஏற்படுகின்றன.இதைத் தடுக்க என்ன வழி?யாரையும் பார்க்கும்போது எந்த மாதிரியான ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் .இப்போது நாம் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் கடந்த காலத்தில் நாம் ஏற்படுத்தியிருந்த பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.உறவுகள் அதன்பின் பலப்படும்.
--ஜெ.கிருஷ்ண மூர்த்தி..
--ஜெ.கிருஷ்ண மூர்த்தி..