உலகின் அதிவேக விமானம் கான்கார்ட்

 

பண்டைய காலங்களில் மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு செல்ல ஆண்டு கணக்கில் ஆனது, சக்கரத்தை கண்டறிந்து அவற்றை மாதக்கணக்குக்கு இட்டு வந்தான் நாகரீக மனிதன். தொழில் நுட்பவசதி பெருகியவுடன் அவை நாட்கணக்கு வந்தன. 19-ம் நூற்றாண்டுக்கு பின் ரைட் சகோதரர்களால் அது மணிக்கனக்குக்கு வந்தன. ஆனாலும் ஒலியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் எந்திரத்தை உண்டாக்குவது என்பது 1970-ஆம் ஆண்டுவரை மனிதனின் கனவாகவே இருந்து வந்தது எனலாம். பியர்ரி சாத்ர் என்பவர்தான் இக்கனவு திட்டத்தை செயல் முறைக்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் ஆவார்.

1950-களில் பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒலி மிஞ்சு வேக பயணிகள் வானூர்திகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தன, போட்டியில் வென்றது பிரான்சும் பிரிட்டனுமே. பிரான்சின் சட் வானூர்தி நிறுவனம் சுப்பர் கேரவெல்-223 என்ற மின்னல் வேக பயணிகள் விமானத்தை உருவாக்கி சோதனை செய்தது. இவ்வேளையில் பிரிட்டனின் அதிவிரைவு விமானம வடிவமைப்பு சுமார் 100 பேரை சுமந்து செல்லும் முக்கோண வடிவிலான மெல்லிய இறக்கை கொண்டதாக இருந்தது. 1960-களின் தொடக்கத்திலேயே இருவித வடிவமைப்புகளும் வியாபார நோக்கில் உற்பத்தியை துவக்க தயாராய் இருந்தன. ஆனால், உற்பத்தி செலவு மிக அதிகமாக இருந்ததால் பிரிட்டன் சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பை கோரியது. பிரான்சு மட்டுமே இதில் ஆர்வமாக இருந்ததனால் அது மட்டுமே முன்வந்தது. பிரிட்டிஷ் வானூர்தி நிறுவனத்துக்கும் (British Aircraft Corporation) பிரான்சின் ஏரோச்பேஷியேல் நிறுவனத்துக்கும் (Aerospatiale) இடையே கான்கார்ட் ஒப்பந்தம் 28-நவம்பர்-1962 ல் கையெழுத்தானது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தமாக அல்லாமல் இருநாடுகளுக்கிடையேயான சர்வதேச உடன்பாடாகவே அதிவேக விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் எந்தக் காரணத்தினாலும் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேர்ந்தால் விலகும் நாடு மற்ற நாட்டுக்கு பெரும் தொகையை தருமாறு ஒப்பந்தம் எழுதப்பட்டது. இக்கூட்டமைப்பு முதலில் நீண்டதூர வானூர்தியும் பின்னர் குருந்தொலைவு வானூர்தியும் தயாரிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் குருந்தொலைவு வானூர்திக்கு வாங்குவோரிடம் வரவேற்பு இல்லாததால் நீண்டதூர வானூர்தி மட்டும் உற்பத்தி செய்வதென முடிவு செய்யப்பட்டது.

1965-பிப்ரவரியில் அதிவேக விமான தயாரிப்பின் கட்டுமானம் தொடங்கியது. ஒரு விமானம் (001) பிரான்சிலும் மற்றொரு விமானம் (002) பிரிட்டனிலும் கட்டப்பட்டன. மார்ச் 7, 1969 ல் முதல் விமானம் கான்கார்-001 சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் விமானி ஆந்த்ரே துர்காட் ஆவார். கான்கார்டின் முதல் ஒலி மிஞ்சு வேக பயணம் 1-அக்டோபரில் நிகழ்ந்தது அதன் பின்னர் 2000-க்கும் மேற்பட்ட மணி நேரங்கள் விண்ணில் ஒலி மிஞ்சு வேகத்தில் பறந்து சோதனை நிகழ்த்தப்பட்டது.
கான்கார்ட், நான்கு ஒலிம்பஸ் எந்திரங்களைக் கொண்ட முக்கோண இறக்கை கொண்ட வானூர்தியாகும். ஒலிம்பஸ் எந்திரங்கள் முதலில் அவ்ரோ வல்கன் குண்டுவீசும் போர்விமானத்துக்காக தயாரிக்கப்பட்டவையாகும். கான்கார்ட் உயர் வேகத்துக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டிருந்தது அவற்றில் முக்கியமாக கருதபடுபவை, இரட்டை முக்கோண வடிவ இறக்கை, மாறுபடும் காற்று உட்கொள்ளும் வடிவமைப்பு, மின் கட்டுப்பாட்டில் இயங்கும் உந்து-எந்திரங்கள் ஆகியவை ஆகும்.

உலக உருண்டையை வலம் வர மனிதன் பல மாதங்கள் எடுத்துக்கொண்ட காலம் போய் சில மணி நேரங்களில் உலகைச் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. கன்கார்டு விமானத்தின் வருகைக்குப் பின்னர்தான் இது சாத்தியப்பட்டது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளின் விந்தை தயாரிப்பான இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2 ஆயிரத்து 179 கிலோ மீட்டர். அதாவது காற்றில் ஒலி பரவும் வேகத்தைவிட இது 2 மடங்கு அதிகம் மேலும் தற்போதுவரையுள்ள ஏணைய பயணிகள் விமானங்களின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 700kmh தான் என்பது குறிப்பிடதக்கது.

லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு ஒரு கான்கார்ட் விமானம் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விடும். இதற்கான பயணக்கட்டணம் 5 லட்ச ரூபாய். வேகமான வான் பயணத்தில் கன்கார்டு பல சாதனைகளைப் படைத்தது. 1970-களிலேயே கன்கார்டு உருவாக்கப்பட்டு விட்டாலும் வர்த்தகரீதியாக இது 1976-ல் தான் தனது சேவையை தொடங்கியது.
மொத்தம் 20 கன்கார்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பிரபல விமான நிறுவனங்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி இயக்கின. ஆனால் லண்டன்-பாரீஸ், லண்டன்-நியூயார்க் மார்க்கங்கள் தவிர மற்ற மார்க்கங்களில் இது பெரும் நஷ்டத்தையே தந்தது. எரிபொருளை பீப்பாய் பீப்பாயாக குடித்ததும், கட்டணங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததும்தான் இந்த நஷ்டத்துக்கு காரணம். இதனால் கன்கார்டு விமானங்கள் மெல்ல மெல்ல சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

கடைசியாக 2003-ம் ஆண்டுதான் கன்கார்டு பறந்தது. அதற்குப் பிறகு பறக்கவேயில்லை. அதாவது கன்கார்டு விமானம் கடைசியில் காயலான் கடை சரக்காகிவிட்டது. வர்த்தகரீதியில் கன்கார்டு ஜெயிக்காவிட்டாலும் கூட தொழில்நுட்பரீதியில் இது உலக அதிசயங்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.