இரண்டாம் உலகப்போரில், ஹிட்லருக்கு அடுத்த பெரிய சர்வாதிகாரியான முசோலினி போரில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 1943 ஜுலையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஹிட்லர் வாழ்க்கையைப் போலவே, முசோலினியின் வாழ்க்கையும் திகிலும், திருப்பங்களும் நிறைந்தது.
இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜுலை 29-ந்தேதி பிறந்தவர் முசோலினி. தாயார் பள்ளி ஆசிரியை. அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை, "மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலரவேண்டும்" என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார். அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றறிந்த அவர், பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். ஆசிரியர் தொழிலை விட்டு சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின.
ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையானபோது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர். மறுநாளே, "அவந்தி" என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப்போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். 1919-ல் உலகப்போர் முடிந்தது. போரில், இத்தாலியில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தாண்டவமாடின. நாட்டில் கலகங்கள் மூண்டன. முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோகிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது பின்னர் அது 1920-ல் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது.
1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியா விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித்தலைவரான முசோலினி, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற்பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின.
பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் எப்போதும் கலாட்டா செய்து கொண்டிருந்தார் முசோலினி. அதுமட்டுமல்ல, ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப்பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார். ரவுடிகள் சாம்ராஜ்யம் மக்கள் தன் பேச்சில் மயங்கிக்கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், பொது மக்களையும் அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். ஊழியர்களை விரட்டி அடித்துவிட்டு, அலுவலகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.
1922 அக்டோபரில், முசோலினியின் "கருஞ்சட்டைப்படை" இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சரவையை ராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப்பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார். அடக்கு முறை ஆட்சிக்கு வந்த முசோலினி, "இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்துவிடுவேன்" என்று அறிவித்தார்.
அக்கிலி ஸ்டாரேஸ் முசோலினியின் மற்றுமொரு தீவிர விசுவாசி ஆவார், ஏறக்குறைய அவரின் தளபதியாகவே செயல்பட்டு முசோலினியின் ஆணைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றியவர்.
முசோலினி ஆச்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்ல. தன் எதிரிகளைச் "சிரச்சேதம்" செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்கு இயந்திரக்கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது. வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார் முசோலினி. அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார்.
1922-ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர். அதைத்தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும், ஆயுதத் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார். இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள்.
இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தாள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மக்கள் புகழ்ந்தனர். பிறகு போரின் போக்கு மாறியது. மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். போர் முனையில் இத்தாலி ராணுவம் தோல்வியை சந்தித்ததால்முசோலினியை 1943 ஜுலை 9-ந்தேதி "பாசிஸ்ட்" கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. அவரையும், அவர் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் கைது செய்து, வீட்டுக் காவலில் சிறை வைத்தது.
28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் வீட்டுக் காவலில் இருந்து தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் (பாசிச மற்றும் நாசிச கொள்கைகளின் எதிர்பாளர்கள்) பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். ஏப்ரல் 29, 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோவிற்கு எடுத்து செல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர்.
பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.
|