தானே நகரும் கற்கள்!!!


 
 
“அமைதியாக இருக்கும் எந்த ஒரு திட அல்லது திரவ பொருட்களின் மீது வெளிப்புறமாக இருந்து எந்த ஒரு விசையும் செயல்படாதவரை அப்பொருள் அதேநிலையில் தொடர்ந்து இருக்கும் இதை எங்கயோ படிச்ச மாதிரி இருக்குதில்ல..! இது நியூட்டன் என்கிற விஞ்ஞானி  சொன்னது. அவரு சொன்ன அந்த விதி அவருக்கு பக்கத்தில இருக்குற பிரதேசமான அமெரிக்காவின் ரேஸ் டிரெக் பிளாஸாபிரதேசதுக்கு பொருந்தலை. காரணம் அங்குள்ள கற்கள் எந்தவித புற விசையும் இல்லாமல் தன்னாலேயே நகர்கின்றன. ஆச்சிரியமா இருக்குல்ல! கற்கள் எப்படி தன்னால நகரும்? வாங்க இதுபற்றி இன்றைய வியக்கவைக்கும் தகவல்களில் கொஞ்சம் தெரிஞ்சுப்போம்.

அமெரிக்காவின் ரேஸ் டிரெக் பிளாஸாபிரதேசம் விஞ்ஞானிகளிடையே ரொம்பவும் பிரசித்தமானது. இந்த பிரதேசத்துக்கு மரண வெளிஎன்று இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ஐஸ்படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.

இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம் என்ற ஆய்வு நடைபெற்று வருகின்றது. இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம் எனவே அந்த வாதமும் எடுபடாது.

நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பொறுமையாய் காத்திருப்போம் உண்மை அறிய!