விடுதலை போராட்டத்தை பற்றி நினைவு கூறும் போதெல்லாம் மாவீரன் என்ற அடைமொழிக்கு மிக பொருத்தமான பகத்சிங்கை பற்றி குறிப்பிடாமல் நிறைவு செய்ய இயலாது. “அடங்கமறு, அத்துமீறு” “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற புகழ் பெற்ற வரலாற்று கோசங்களை நாம் மறந்திருந்தாலும் நம் நாடாளுமன்ற சுவர்கள் இன்றும் நினைவுகூறும்.
அன்று அந்த எழுச்சிமிக்க சீக்கிய வீரனை கண்டு அஞ்சிய மேற்கத்திய வெள்ளைக்காரன் அவரை போல் இன்னும் சில வீரர்களான சுகதேவ்சிங், ராஜகுரு போன்ற பயம் அறியா விடுதலை போராட்ட வீரர்களை பெற்றுத்தந்த அந்த சீக்கிய மதத்தின் பெயரை உச்சரிக்கவே அஞ்சினான் என்று சொன்னால் மிகையில்லை. அவர்களுடன் நேருக்கு நேர் போரிட துணிவில்லா அந்த முதுகெலும்பற்ற கோழை அவர்களை முட்டாள்களாக சித்தரித்து கேலிசித்திரம் வரைந்து சாண்டா சிங், பான்டா சிங் என்ற புனைபெயர்களை பயன்படுத்தி “சர்தார்ஜி ஜோக்ஸ்” என்ற தலைப்பில் ஆங்கில புத்தகம் வெளியிட்டு ஒருவித குரூர சந்தோசம் தேடிக்கொண்டான், பின்னர் அது அந்த வெள்ளைதோல்காரான் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாகவே பரவிற்று ஏனெனில் மற்றவர்களை எள்ளிநகைப்பதில் நம்மைபோல் கரைகண்டவர்கள் இந்த உலகில் வேறு எவரும் உண்டோ?
இன்று அவன் இங்கு இல்லை, அன்று அவன் எழுதி விட்டு சென்ற சர்தார்ஜி ஜோகுகளை காட்டிலும் இன்று அதிகமாகவே புழக்கத்தில் உள்ளது. இன்று அவற்றையெல்லாம் எழுதி கொண்டிருப்பவர்கள் நம்மவர்களே. மேலே சொன்ன வீரமிக்க இளைஞர்களை பெற்று தந்த அந்த வீரம் மிக்க மதத்தினரை பற்றி நகைத்து எழுத அல்லது அவற்றை பரப்ப நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எண்ணிபாருங்கள். இன்றும் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரனாக எல்லையை பாதுகாத்துக் கொண்டிருப்போர்களில் பெரும்பான்மையோர் அவர்கள்தான். உழைப்புக்கு பெயர் போனவர்கள் சிங் என்ற சிங்கங்கள்.
இந்த உண்மையை ஒரு நண்பி எனக்கு தெரிவித்தபோது நான் எனது தவறை உணர்ந்துகொண்டேன் பலனாக எனது இணைய பக்கத்திலுள்ள சர்தார்ஜி ஜோக்குகளை நீக்கிவிட்டேன் இனிமேல் அத்தகைய ஜோக்குகளை என் இணையபக்கத்தில் பிரசுரிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நிகழ்ந்த அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அதோடில்லாமல் யாருடைய இணையதளத்திலாவது இனி நான் வாசிக்க நேர்ந்தால் அந்த இணையதளதாரருக்கு எனது எதிர்ப்பை மின்னஞ்சலில் தெரிவிக்கவும் முடிவு செய்துவிட்டேன்.
தமிழனை பற்றி யாரவது, எங்காவது இப்படி நகைத்து எழுதினால் நாம் ரசித்து சிரிப்போமா என்ன? வாசிக்கும் உங்களில் யாராவது என்னை இந்த விசயத்தில் பின்தொடர்ந்தால் அது எனது இந்த எழுத்திற்கு கிடைத்த வெற்றியே!.
|